ஹெல்மெட் அணியாமல் சென்றதுடன், ஆதாரம் கேட்ட இளைஞர் - கெத்து காட்டிய போக்குவரத்து போலீசார்!

ஹெல்மெட் அணியாமல் சென்றதுடன், ஆதாரம் கேட்ட இளைஞர் - கெத்து காட்டிய போக்குவரத்து போலீசார்!
ஹெல்மெட் அணியாமல் சென்றதுடன், ஆதாரம் கேட்ட இளைஞர் - கெத்து காட்டிய போக்குவரத்து போலீசார்!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கண்காணிப்பு கேமரா மூலம் ஹெல்மெட் அணியாமல் சென்றவரை கண்டுப்பிடித்து ஆன்லைனில் அபராதம் விதிக்கப்பட்டநிலையில், ட்விட்டரில் பகிர்ந்து ஆதாரம் கேட்ட இளைஞருக்கு, மாநகர போலீசார் புகைப்படத்துடன் கொடுத்த பதில் வைரலாகி வருகிறது.

இந்தியாவில் பெருகிவரும் மக்கள் தொகை காரணமாக, மும்பை, பெங்களூரு, சென்னைப் போன்ற பெருநகரங்களில் போக்குவரத்து நெரிசல் என்பது அதிகளவில் காணப்படுகிறது. குறிப்பாக பெங்களூருவில் இயங்கி வரும் முன்னணி ஐ.டி. நிறுவனங்களில் வேலைப்பார்ப்பவர்கள் மிகுந்து காணப்படுவதால், வாகனங்களின் எண்ணிக்கையும் உயர்ந்து சாலைகளில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவது என்பது சவாலான விஷயமாக இருக்கிறது. இதனைக் கட்டுப்படுத்த தானியங்கி சிக்னல்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு போக்குவரத்து விதிகளை மீறும் நபர்களை அதன்மூலம் கண்டுப்பிடித்து ஆன்லைனில் அபராதம் விதிக்கப்படும் நடைமுறையும் தற்போது பெருநகரங்களில் காணப்படுகிறது. இந்நிலையில், பெங்களூருவில் உல்லசப்பா சந்திப்பில் கடந்த 2-ம் தேதி இளைஞர் ஒருவர் ஸ்கூட்டியில் ஹெல்மெட் அணியாமல் பயணித்துள்ளார். இதையடுத்து கண்காணிப்பு கேமரா மூலம் அவரது வாகண பதிவெண்ணை கண்டுப்பிடித்து, ஆன்லைன் செல்லான் முறையில் அவருக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்துள்ளனர்.

இதனால் வருத்தம் அடைந்த பெலிக்ஸ் ராஜ் என்ற இளைஞர், தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த செல்லானை பகிர்ந்து, “நான் ஹெல்மெட் அணியவில்லை என்பதற்கான உரிய ஆதாரங்கள் இல்லை. தயவு செய்து இதுதொடர்பான புகைப்படத்தை ஆதாரமாக காட்ட வேண்டும் அல்லது இந்த வழக்கை நீக்க வேண்டும். இதற்கு முன்பும் இதேபோல் ஆதாரமற்ற குற்றச்சாட்டால் நான் அபராதம் செலுத்தினேன். இதனால் மீண்டும் அபராதம் செலுத்த மாட்டேன்'' எனக் கூறி பெங்களூர் மாநகர போக்குவரத்து போலீஸ் மற்றும் மாநகர போலீஸ் ஆகியவற்றின் ட்விட்டர் ஐடியை டேக் செய்திருந்தார்.

இதனை உடனடியாக கவனித்த பெங்களூரு மாநகர போக்குவரத்து போலீசார் சில நிமிடங்களிலேயே அந்த இளைஞருக்கு ட்விட்டரில் பதில் அளித்தனர். அதாவது ஹெல்மெட் இன்றி ஸ்கூட்டரில் பயணித்த அவரின் புகைப்படம் மற்றும் விதிமுறைகளை எப்போது, எங்கே மீறினார் என்பது குறித்த தகவல்களை அவரது ஐடியை டேக் செய்து வெளியிட்டனர்.

போக்குவரத்து போலீசாரின் இந்தப் பதிவைக் கண்ட நெட்டிசன்கள் தற்போது இந்த சம்பவம் தொடர்பாக, ஸ்கீரின்ஷாட் எடுத்து மீம் போட்டு, ட்ரெண்டாக்கி வருகின்றனர். அதாவது பெங்களூரு மாநகர போக்குவரத்து போலீசார் இந்த விஷயத்தில் கெத்து காட்டியுள்ளதாகவும், ஹெல்மெட்டுக்கு பதிலாக ஹெட்போனை பயன்படுத்தியதும், தவறு என்று தெரிந்தும் வேண்டுமென்றே போக்குவரத்து காவலர்களின் நேரத்தை வீணாக்கியதுடன், அவர்களுக்கு சவால் விடுத்தத்ற்காகவும் அந்த இளைஞர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நெட்டிசன்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வந்தனர்.

இதைப் பார்த்த பெலிக்ஸ் ராஜ், “ போக்குவரத்து போலீசாரின் ஆதாரத்துக்கு நன்றி. பொதுமக்களாகிய ஒவ்வொருவருக்கும் இதனை கேட்க உரிமை உண்டு. இந்த விவகாரத்தில் தெளிவுப்படுத்தியதற்கு பெங்களூரு மாநகர போக்குவரத்து போலீசாரை பாராட்டுகிறேன். நான் அபராதம் செலுத்துகிறேன். அனைத்து மீம் உள்ளடக்கங்களுக்கும் பாராட்டுகள்” என்று தெரிவித்துள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com