’ஒரு பார்ட்னர் தேவை’ - ரூ.13,750 வாடகை.. வைரலாகும் பெண்ணின் பதிவு!

பெங்களூருவில் வீட்டு வாடகையைப் பகிர்ந்துகொள்ள ஒரு பார்ட்னர் தேவை என பெண் ஒருவர் விளம்பரம் செய்திருப்பது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உதிஷா மதன்
உதிஷா மதன்ட்விட்டர்

இந்தியாவில், வேலைக்காக நாளுக்கு நாள் வெளியூர் மற்றும் மாநிலங்களுக்குச் செல்லும் வழக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மெட்ரோ நகரங்களான டெல்லி, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு மக்கள் பெருமளவு சென்று வேலை பார்த்து வருகின்றனர். இதன்காரணமாக, மெட்ரோ நகரங்களின் நிலத்தின் மதிப்பு வெகுவேகமாக உயர்ந்து வருகிறது.

குறிப்பாக, இங்கு ரியல் எஸ்டேட் வர்த்தகமும், வீட்டு வாடகையும் தாறுமாறாக அதிகரித்து வருகிறது. இதனால் வீடு மற்றும் அலுவலக புரோக்கர்கள் காட்டில் பணமழைதான். அதிலும் பெங்களூரு போன்ற நெரிசலான, பரபரப்பான நகரத்தில் சுலபமான வாடகைக்கு வீடுகள் கிடைப்பது என்பது மிகவும் அரிதான விஷயமாக இருக்கிறது.

அந்த வகையில், பெங்களூரைச் சேர்ந்த பெண் ஒருவர், ’தனது ஃபிளாட்டுக்கு ஒரு பெண் பார்ட்னர் தேவை’ எனக் கூறி எக்ஸ் தளத்தில் செய்த பதிவு வைரல் ஆகி வருகிறது. டிசைனரான உதிஷா மதன் என்ற பெண், ’கோரமங்களாவில் உள்ள தனது இரண்டு படுக்கையறை, கிச்சன் கொண்ட ஃபிளாட்டுக்கு ஒரு பார்ட்னர் தேவை’ என எக்ஸில் பதிவிட்டிருந்தார்.

அந்தப் பதிவில், ஒரு டிசைன் ஆப் மூலம் வீடு பற்றிய படங்கள், தகவல்களை எளிதாகப் படிக்கும்படியும் கண்ணைக் கவரும் வகையிலும் வடிவமைத்து பகிர்ந்திருக்கும் அவர், ’தனது வீட்டுக்கு பார்ட்னர் ரூ.13,750ஐ மாத வாடகையாகத் தந்தால் போதும்’ எனக் குறிப்பிட்டிருந்தார். மேலும் அதில் குடியிருப்பைப் பகிர்ந்துகொள்ள விரும்பும் நபர் ரூ.50,000த்தை வைப்புத் தொகையாகத் தரவேண்டும் எனவும், ஏப்ரல் 1க்குள் தேர்வு செய்யவும்’ எனவும் அதில் பதிவிட்டுள்ளார்.

இந்தப் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. பலரும் அவருடைய பதிவுக்கு கருத்துகள் கூறி வருகின்றனர். அதில் பலரும், உதிஷா மதன் மற்றவர்களைவிட மிகக் குறைந்த வாடகையை, குறிப்பாக பெங்களூருவில் பிரபலமான, பரபரப்பான பகுதிக்கு கேட்கிறார்’ என்று சுட்டிக்காட்டியுள்ளனர்.

உண்மையில், கடந்த ஆண்டுமுதல் பெங்களூருவில் வீட்டு வாடகை மிக அதிகமாக உயர்ந்துவருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, பெங்களூருவின் முக்கியப் பகுதிகளில் வாடகை 30 சதவிகிதத்துக்கும் மேலாக உயர்ந்துள்ளன. பெங்களூருவில் உள்ள ஏழு சதவீத நில உரிமையாளர்கள் 2023ஆம் ஆண்டில் வாடகையை 30 சதவீதத்துக்கும் அதிகமாக உயர்த்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

பெங்களூருவில் கணக்கெடுக்கப்பட்ட 52 சதவீத நில உரிமையாளர்கள், வாடகையில் இருந்துவரும் வருமானத்தையே முழுமையாக நம்பியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பெங்களூருவின் ஒயிட்ஃபீல்டில் சுமார் 1,000 சதுர அடி பரப்பளவில் உள்ள நிலையான 2பிஎச்கே பிளாட் வாடகை 31 சதவீதம் அதிகரித்திருப்பதாகக் கூறப்படுகிறது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com