களைகட்டிய பெங்களூரு எதிர்க்கட்சிகள் கூட்டம்: மம்தா to ஸ்டாலின்..பேசியவையும் எடுக்கப்பட்ட முடிவுகளும்
2024 பொதுத்தேர்தலுக்கு கட்சிகள் தயாராகி வருகின்றன. இதற்கான போட்டியாக பெங்களுருவிலும், டெல்லியிலும் கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் நடந்துள்ளது. இரண்டு கூட்டமும் இந்திய அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, பெங்களூருவில் இன்று நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டன. முதலில் நடந்த கூட்டத்தைக் காட்டிலும் அதிகப்படியான கட்சிகள், அதாவது மொத்தம் 26 எதிர்க்கட்சிகள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டன. இது, தேசியளவில் எதிர்க்கட்சிகளை ஒரே அணியில் கொண்டு வருவதில் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இந்தக் கூட்டணிக்கு, I-N-D-I-A (Indian National Developmental Inclusive Alliance)எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. மேலும், 11 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு விரைவில் அமைக்கப்பட இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “காங்கிரஸ் கட்சி பிரதமர் பதவியை எதிர்பார்க்கவில்லை. பாஜகவை வீழ்த்துவதே இலக்கு. இதற்காக அனைத்து கட்சிகள் உடனும் காங்கிரஸ் இணைந்து பணியாற்றும். பாரதிய ஜனதா ஆட்சியின் தோல்வியை மக்களிடம் கொண்டு செல்வோம்” என்றார்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, “எதிர்க்கட்சிகளின் I-N-D-I-A கூட்டணியை தேசிய ஜனநாயக கூட்டணி (National Democratic Alliance) வெல்ல முடியுமா என்று சவால் விடுகிறேன். நாங்கள் இந்தியாவை நேசிக்கிறோம். ஏழைகளுக்காக, இளைஞர்களுக்காக, மாணவர்களுக்காக, விவசாயிகளுக்காக, நசுக்கப்பட்டவர்கள், பட்டியலினத்தவர் நாங்கள் துணை நிற்கிறோம்” என்றார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ”யாரும் இந்தியாவின் இந்தியாவின் கோட்பாட்டை அழிக்கமுடியாது. ஆனால் பாரதிய ஜனதா கட்சி இந்தியாவின் கோட்பாட்டை அழித்துக்கொண்டிருக்கிறது.
இந்தியாவின் கோட்பாட்டுக்கும், பாரதிய ஜனதா கட்சியின் கோட்பாட்டுக்கும் இடையே போர் நடக்கிறது. இதில் இந்தியா கூட்டணி, இந்தியா சார்பாக போரிடுகிறது. இது இந்தியா Vs மோடி” எனப் பேசினார்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ”TRANS இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வேண்டும், குழந்தைகளுக்கு கல்வி வேண்டும், ஒடுக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டும். இவற்றை முன்னிறுத்திஎங்கள் கூட்டணி செயல்படுகிறது. வேலைவாய்ப்பு, கல்வி, ஒடுக்கப்பட்டவர்களின் நீதிக்காக கூட்டணி” என்றார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், “எதிர்க்கட்சிகளின் ஒவ்வொரு கூட்டத்தின்போதும் அமலாக்கத்துறை சோதனை நடத்துகிறது” என்றார்.
அதேநேரத்தில் இன்று டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகள் பங்கேற்ற ஆலோச்னைக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் குறித்து பேசிய பிரதமர் மோடி, ”எதிர்க்கட்சிகளின் தலைவர்களை ஒன்றாகப் பார்க்கும் மக்கள், ஊழலின் குறியீடுபோல இருப்பதாக கூறுகிறார்கள். எதிர்க்கட்சிகளின் கூட்டம் உச்சகட்ட ஊழலின் ஒருங்கிணைவு. எதிர்க்கட்சிகள், நாட்டின் ஏழை மக்களின் முன்னேற்றம் பற்றி கவலைப்படுவதில்லை. தங்கள் குடும்பத்துக்காக ஊழலை அதிகரிப்பதே எதிர்க்கட்சிகளின் குறைந்தபட்ச திட்டம்” என்றும் பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.