தினமும் 16 மணி நேரம் வேலை... 24 கிலோ உடல் எடை அதிகரிப்பு - பெங்களூரு ஊழியர் கவலை!
E. இந்து
பெங்களூரூவில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் ஒருவர், தினமும் 16 மணி நேரம் வேலை செய்வதாகவும், இதனால் 2 ஆண்டுகளில் 24 கிலோ வரை உடல் எடை அதிகரித்துவிட்டதாகவும் ரெட்டிட் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பெங்களூரு பெரு நிறுவனங்களின் நகரமாக உள்ளது. பல ஐடி நிறுவனங்கள் பெங்களூருவை தங்களது தலைமையகமாக கொண்டுள்ளது. அப்படி பெங்களூருவை சேர்ந்த பெருநிறுவனம் ஒன்றில் பணியாற்றும் ஒருவர் தனது வேலை குறித்து ரெட்டிட் பக்கத்தில் வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவின் தொடக்கத்தில், “நான் உண்மையிலேயே இறந்து கொண்டிருக்கிறேனா?” என ஆரம்பித்து தொடர்ந்து, “உங்களில் பெரும்பாலோரைப் போலவே, நானும் இந்தியாவில் ஒரு கார்ப்பரேட் அடிமை. என் தொழில் வாழ்க்கையின் தொடக்கத்திலிருந்தே நச்சுத்தன்மை வாய்ந்த வேலை கலாச்சாரத்தில் சிக்கித் தவிக்கிறேன். கிட்டத்தட்ட மூன்று வருடங்களாகிவிட்டன. ஒவ்வொரு நாளும், நான் 14 முதல் 16 மணிநேரம் வேலை செய்கிறேன் அல்லது வேலை தொடர்பான பணிகளைச் செய்கிறேன்.
ஆகஸ்ட் 2022ல் இந்த நிறுவனத்தில் சேர்ந்ததிலிருந்து, என் எடை 24 கிலோ அதிகரித்துவிட்டது. எனது தூக்க அட்டவணை முற்றிலும் குழப்பமாக உள்ளது - சில இரவுகளில் நான் அதிகாலை 2 மணிக்கும், சில இரவு 11 மணிக்கும் தூங்குகிறேன். ஆனால் நான் எப்போதும் காலை 9 மணிக்கு அலுவலகத்தில் இருப்பேன்.
என் அம்மா தொடர்ந்து கவலைப்படுகிறார். நான் எப்போதும் என் வேலையில் நேர்மையாக இருக்க முயற்சித்தேன்.
பெரும்பாலும் என் சொந்தப் பணிகளுக்கு முன்னுரிமை அளிக்காமல், சக ஊழியர்களுக்கு உதவுவது மற்றும் குறிப்பிட்ட நேரத்தில் வேலைகளை முடிப்பேன். திரும்பிப் பார்க்கும்போது, நான் நிறைய கற்றுக்கொண்டேன் என்று சொல்லலாம், ஆனால் நாணயத்தின் மறுபக்கம் வேதனையானது. எனக்கு தனிப்பட்ட வாழ்க்கை இல்லை.
நான் 2.5 ஆண்டுகளில் எங்கும் பயணம் செய்யவில்லை - பெங்களூரில் உள்ள நந்தி மலைகளுக்குக் கூட நான் பயணம் செய்தது இல்லை. என் காதலியை நான் மிகவும் புறக்கணித்துவிட்டேன், ஆனால் என் வாழ்க்கையில் எனக்கு இருக்கும் ஒரே நிலையான விஷயம் அவள்தான்.
இப்போது, நான் முற்றிலும் சோர்வடைந்துவிட்டதாக உணர்கிறேன். நான் ஒரு சமநிலையான வாழ்க்கையை உருவாக்கவில்லை . நான் ஒரு சிறந்த நிறுவன அடிமையாகிவிட்டேன். நான் பெரும்பாலான வார இறுதி நாட்களில் வேலை செய்கிறேன், என் விடுமுறையை ரத்து செய்கிறேன். எப்போதும் வேலைக்கு முதலிடம் கொடுக்கிறேன்.
பதிலுக்கு... ஆம், நான் கொஞ்சம் பணம் சம்பாதிக்கிறேன், ஆனால் நான் திரும்பிப் பார்க்கும்போது எனக்கு எந்த மகிழ்ச்சியும் இல்லை. நேர்காணல்களுக்குத் தயாராவதற்கு அல்லது சரியான இடைவெளி எடுக்க எனக்கு நேரமோ சக்தியோ இல்லை” என வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.