குளியலறையில் விழுந்து உயிரிழந்த காவல்துறை அதிகாரி: சோதனையில் கொரோனா உறுதி

குளியலறையில் விழுந்து உயிரிழந்த காவல்துறை அதிகாரி: சோதனையில் கொரோனா உறுதி
குளியலறையில் விழுந்து உயிரிழந்த காவல்துறை அதிகாரி: சோதனையில் கொரோனா உறுதி

பெங்களூருவில் காவல்துறை அதிகாரி ஒருவர் குளியலறையில் விழுந்து இறந்துள்ளார். இறப்புக்குப் பிறகான மருத்துவ சோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதியாகியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள வைட்ஃபீல்ட் காவல் நிலையத்தைச் சேர்ந்த 57 வயதான உதவி சப்-இன்ஸ்பெக்டர் நேற்று இரவு அவரது இல்லத்திலுள்ள குளியலறையில் மயங்கி விழுந்துள்ளார். உடனே அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், மருத்துவமனை வருவதற்கு முன்பாகவே அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதன்பிறகு அவரது உடலில் இருந்து எடுக்கப்பட்ட ரத்த மாதிரிகள் மருத்துவ பரிசோதனை அனுப்பப்பட்டது. அந்த மருத்துவ பரிசோதனை முடிவுகளில் அவருக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதியாகியுள்ளதாக வைட்ஃபீல்ட் காவல்துறை துணை ஆணையர் எம்.என். அனுச்செட் கூறியுள்ளார். மேலும் அவர் “இந்தச் சம்பவம் நடந்தபோது அவர் அவரது வீட்டில் இருந்தார்” எனத் தெரிவித்துள்ளார். இறந்த காவல்துறை அதிகாரியுடன் அவரது மனைவியும் மகளும் இருந்துள்ளனர்.

கடந்த ஜூன் 10 முதல் 55 வயதுக்கு மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள் வீட்டிலே இருக்க வேண்டி அறிவுறுத்தப்பட்டிருந்தனர். ஆகவே இறந்து போன காவல் அதிகாரி வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், சுகாதாரத் துறை அதிகாரிகள் இப்போது மறைந்த காவல்துறை அதிகாரியுடன் தொடர்பில் இருந்தவர்களை தேடி கண்டறிந்து வருகின்றனர். கொரோனா நோய்த் தொற்று தொடங்கியதிலிருந்து, பெங்களூரில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் பணிபுரிந்து வந்த 50 க்கும் மேற்பட்ட காவல் அதிகாரிகளுக்கு தொற்று இருப்பது கண்டறியபட்டுள்ளது. இதில் வில்சன் கார்டன் போக்குவரத்து காவல் நிலையத்துடன் தொடர்புடைய 59 வயதான அதிகாரி ஒருவர், கலாசிபல்யம் காவல் நிலையத்தைச் சேர்ந்த 56 வயது நிரம்பிய கான்ஸ்டபிள் ஒருவர் உட்பட குறைந்தது நான்கு பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com