ஆசைகாட்டி 2 ஆயிரம் கோடி வசூல் - உரிமையாளர் தற்கொலை முயற்சி?

ஆசைகாட்டி 2 ஆயிரம் கோடி வசூல் - உரிமையாளர் தற்கொலை முயற்சி?

ஆசைகாட்டி 2 ஆயிரம் கோடி வசூல் - உரிமையாளர் தற்கொலை முயற்சி?
Published on

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் இஸ்லாமிய வங்கியில் 2000 கோடி ரூபாய் பணம் வசூலாகிய பிறகு அதன் உரிமையாளர்  தற்கொலை செய்து கொள்ள போவதாக மிரட்டியுள்ளார்.

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் 2006ஆம் ஆண்டு ‘ஐ மானிட்டரி அட்வைசரி’என்ற இஸ்லாமிய வங்கி மற்றும் ஹலால் முதலீட்டு நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனத்தில் பணம் செலுத்தினால் மாதத்திற்கு அதிக வட்டியாக 14%-18% கூடுதலாக கிடைக்கும் என்னும் திட்டத்தை அறிவித்தது. இதனையடுத்து மக்கள் இந்த நிறுவனத்தில் பணம் செலுத்த ஆரம்பித்தனர். அதிலும் குறிப்பாக இஸ்லாமிய மக்கள் அதிகளவில் இந்நிறுவனத்தில் பணம் செலுத்தினர். 

மொத்தமாக இந்தத் திட்டத்தின் கீழ் கிட்டத்தட்ட 2000கோடி ரூபாய் பணம் வசூலானது. இந்தப் பணத்தை இந்நிறுவனம் நகைகள், ரியல் எஸ்டேட், கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் முதலீடு செய்தது. இந்நிலையில் இந்த வங்கியின் உரிமையாளரான முகமது மன்சூர் கான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக ஒரு ஆடியோ பதிவில் மிரட்டியுள்ளார். 

இதுதொடர்பாக வெளியாகியுள்ள ஆடியோ பதிவில் மன்சூர் கான், “நான் அரசியல்வாதிகள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு லஞ்சம் அளித்து சோர்ந்து போய்விட்டேன். இனிமேல் என்னால் முடியாது. என்னிடம் காங்கிரஸ் எம்.எல்.ஏ ரோஷன் பெய்க் வாங்கிய 400 கோடி ரூபாயை திருப்பி தரவில்லை. அத்துடன் என்னுடைய உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது. இதனால் நான் தற்கொலை செய்யப் போகிறேன்” எனப் பேசியுள்ளார்.

இதனையடுத்து இந்த நிறுவனத்தில் பணம் செலுத்திய மக்கள் சிவாஜி நகரிலுள்ள இந்நிறுவனத்தின் முன் போராட்டம் செய்தனர். அத்துடன் இந்நிறுவனத்தை அடித்து நொறுக்க முயன்றனர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் மக்களைக் கட்டுபடுத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தனர். எனினும் இந்த வங்கியின் உரிமையாளர் மன்சூர் கான் தற்கொலை செய்து விட்டாரா அல்லது உயிருடன் உள்ளாரா என்பது குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். 

இதனிடையே இந்த ஆடியோ பதிவு குறித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ ரோஷன் பெய்க்,“நான் இந்த நிறுவனத்திடம் எந்தவிதமான பணப் பரிவர்த்தனையும் செய்யவில்லை. இது எதிர்க்கட்சியினரால் என் மீது பின்னப்பட்ட சதி. இந்த விவகாரத்தில் என்னுடைய பெயர் அடிபடுவது இது இரண்டாவது முறை. இதனால் நான் சைபர் கிரைம் காவல்துறையினரிடம் இது குறித்து வழக்குப்பதிவு செய்யவுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com