மேற்கு வங்க வன்முறையில் மூவர் பலி... பாஜக இன்று பந்த்..!
மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக தொண்டர்களிடையே வன்முறை ஏற்பட்ட நிலையில், மூவர் கொல்லப்பட்டனர். பலர் காணாமல் போயுள்ள நிலையில் இன்று 12 மணி நேர பந்த் போராட்டத்துக்கு பாஜக அழைப்பு விடுத்துள்ளது.
அண்மையில் நிறைவடைந்த மக்களவைத் தேர்தலில், பாஜக 18 தொகுதிகளை கைப்பற்றிய நிலையில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக தொண்டர்களிடையே ஆங்காங்கே தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் பரிஷத் மக்களவைத் தொகுதியில் நேற்று முன்தினம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் நடத்திய வெற்றி பேரணியின் போது கலவரம் மூண்டது. பாஜக கொடி கம்பங்கள் அகற்றப்பட்ட நிலையில், பல கடைகள், வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டன.
இந்த வன்முறையின்போது பாஜகவைச் சேர்ந்த இருவரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒருவரும் கொல்லப்பட்டனர். பலரைக் காணவில்லை எனக் கூறப்படுகிறது. இதனிடையே, நேற்று இறந்தவர்கள் உடல்களை கொல்கத்தா நோக்கி பேரணியாக கொண்டு செல்ல முயன்ற பாஜகவினரை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அவர்கள் உடல்கள் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டன.
இந்நிலையில் வன்முறையை கண்டிக்கும் வகையில் மேற்கு வங்கத்தில் 12 மணி நேர முழு அடைப்புப் போராட்டத்துக்கு பாஜக அழைப்பு விடுத்துள்ளது. இதனிடையே மத்திய உள்துறை அமைச்சகம் மேற்கு வங்க அரசுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், சட்டம் ஒழுங்கை பராமரிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. இதற்கு பதிலடியாக மேற்கு வங்க அரசு மத்திய அரசுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு கட்டுக்குள் இருப்பதாக தெரிவித்துள்ளது.