சீனாவில் அதிவேகத்தில் பரவும் BF.7 ஒமைக்ரான் திரிபு - அலெர்ட் செய்யும் மத்திய அரசு

சீனாவில் அதிவேகத்தில் பரவும் BF.7 ஒமைக்ரான் திரிபு - அலெர்ட் செய்யும் மத்திய அரசு
சீனாவில் அதிவேகத்தில் பரவும் BF.7 ஒமைக்ரான் திரிபு - அலெர்ட் செய்யும் மத்திய அரசு

சீனாவில் அதிவேக கொரோனா பரவலுக்கு காரணமாக கருதப்படும் BF.7 ஒமைக்ரான் திரிபு இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், இந்தியாவில் கொரோனாவே இன்னும் முடிவுக்கு வரவில்லை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

சீனாவில் BF.7 ஒமைக்ரான் வகை திரிபு வேகமாக பரவி வருகிறது. அமெரிக்கா மற்றும் ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் இந்த திரிபு கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், குஜராத்தில் 2 பேரும், ஒடிசாவில் ஒருவரும் இந்த வகை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த திரிபு அதிவேகமாக பரவக்கூடியது என்றும், பாதிக்கப்பட்ட நபருக்கு விரைவாக காய்ச்சல் மற்றும் இருமல் போன்ற அறிகுறிகளை உண்டாக்கும் தன்மை கொண்டது என்றும் அறியப்படுகிறது.

சீனாவில் கொரோனா பரவல் வேகமெடுத்துள்ளதை அடுத்து, மத்திய அரசு சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, கொரோனா இன்னும் முடியவில்லை என்றும், கண்காணிப்பை தீவிரப்படுத்த அனைத்து அறிவுறுத்தல்களும் விடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். கூட்டமான இடங்களில் முகக்கவசம் அணிதல், தடுப்பூசி செலுத்திக்கொள்ளுதல் போன்றவற்றை தவிர்க்கக்கூடாது என்றும் அமைச்சர் அறிவுறுத்தினார்.

கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, தெலங்கானா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பு குறைவாக இருந்தாலும், தற்போது பதிவாகும் பாதிப்புகளில் 84 விழுக்காடு இந்த 5 மாநிலங்களில் இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்த நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால், நாடு முழுவதும் 28 விழுக்காடு நபர்கள் மட்டுமே பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளதாகவும், தகுதியுடைய மற்றவர்கள் விரைந்து தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

இந்நிலையில், சீனாவில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் எதிரொலியாக, சீனா மற்றும் ஹாங்காங்கில் இருந்து தமிழகம் வருவோருக்கு விமான நிலையங்களில் கோவிட் பரிசோதனை நடத்த தேவையான வழிகாட்டுதல்களை வழங்கும்படி தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம், டெல்லியில் உள்ள பொது சுகாதார பணிகள் இயக்குநரகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com