வங்கிகளுக்கு 7 நாட்கள் விடுமுறை இல்லை - பரவியது தவறான தகவல்
வங்கிகளுக்கு 7 நாட்கள் தொடர் விடுமுறை என சமூக வலைத்தளங்களில் பரவிய தகவல் போலியானது.
பொருளாதார சீர்திருத்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக தற்போதுள்ள 27 பொதுத்துறை வங்கிகளை ஒன்றாக இணைத்து 12 வங்கிகளாக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு வெளியிட்டார். இதற்கு வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து செப்டம்பர் 26 மற்றும் 27 ஆம் தேதிகளில் அனைத்து இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு சார்பில் வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக நிதித்துறை செயலாளர் கூறியதால் வேலைநிறுத்தம் ஒத்திவைக்கப்படுவதாக அனைத்திந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு அறிவிப்பு வெளியிட்டது.
இதற்கிடையே வங்கிகளுக்கு 7 நாட்கள் தொடர் விடுமுறை என சமூக வலைத்தளங்களில் தவறான தகவல் பரவியது. இது போலியான செய்தியாகும். உண்மையில் செப்டம்பர் 26, 27 ஆகிய தேதிகளில் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டாதல் அந்த தினங்களில் இயல்பாக வங்கிகள் செய்ல்படும். அதைத்தொடர்ந்து 28, 29 ஆகிய தேதிகள் சனி, ஞாயிறு என்பதால் அன்றைய தினங்கள் இயல்பான வங்கிப்பணிகள் பாதிக்கப்படலாம்.
செப்டம்பர் 30ஆம் தேதி திங்கள்கிழமை அரையாண்டு கணக்கும் முடியும் நாள் என ரிசர்வ் வங்கி அதிகாரப்பூர்வ இணையதளத்தில் எதுவும் அறிவிக்கவில்லை. அக்டோபர் 1ஆம் தேதியும் விடுமுறை என அறிவிக்கப்படவில்லை. அக்டோபர் 2ஆம் தேதி மட்டுமே காந்தி ஜெயந்தி விடுமுறையாகும். இதனால் 7 நாட்கள் தொடர் விடுமுறை என பரவிய தகவல் தவறாகும்.