“வங்கி மோசடிகள் 74 சதவிகிதம் அதிகரிப்பு” - ரிசர்வ் வங்கி அறிக்கை
2018-19ஆம் நிதியாண்டில் வங்கி மோசடிகள் 74 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி தன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கி தனது 2018-19 நிதியாண்டிற்கான அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் நாட்டில் நிலவும் பணப்புழக்கம், கள்ள நோட்டுகள், வங்கி மோசடிகள் மற்றும் ரிசர்வ் வங்கியின் நிதிநிலை ஆகியவை குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கடந்த நிதியாண்டில் நாட்டில் நடைபெற்றுள்ள வங்கி மோசடிகளின் மதிப்பு 71 ஆயிரத்து 543 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டு நடைபெற்ற வங்கி மோசடிகளின் மதிப்பைவிட 73.8 சதவிகிதம் அதிகமாகும்.
மேலும் முந்தைய நிதியாண்டை விட 15% அதிகமாக வங்கி மோசடி வழக்குகள் பதிவாகியுள்ளது என்று அறிக்கை தெரிவித்துள்ளது. அத்துடன் வங்கி துறையில் ஏற்பட்டுள்ள பெரிய அளவிலான மோசடிகளை வங்கிகள் கண்டுபிடிக்க 55 மாதங்கள் எடுத்துள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல சராசரியாக வங்கி மோசடி நடைபெற்று 22 மாதங்கள் கழித்து வங்கிகள் இதனைக் கண்டுபிடித்துள்ளன. மோசடிகளை தவிர்க்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.