வங்கிக் கணக்கில் இனி 4 நாமினிகள்.. நவ. 1 முதல் அமல்.. மத்திய நிதியமைச்சகம் அறிவிப்பு!
வாடிக்கையாளர்கள் அதிகபட்சம் நான்கு பேர் வரை நாமினிகளாக நியமிக்கலாம் என மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. இது, நவம்பர் 1முதல் நடைமுறைக்கு வர இருக்கிறது.
இன்றைய காலகட்டத்தில் பள்ளி மாணவர்கள் முதல் வீட்டில் உள்ள பெரியவர்கள் வரை என அனைவரும் ஏதாவது ஒரு வங்கியில் தங்களது பெயரில் கணக்குகளைத் தொடங்கி பராமரித்து வருகின்றனர். அதேநேரத்தில், அந்த வங்கிக் கணக்கிற்கு வாரிசுதாரரும் நியமிக்கப்படுகிறார். அதாவது, சில சந்தர்ப்பச் சூழ்நிலைகளால், வாடிக்கையாளர் ஒருவர் மரணம் எய்திவிட்டால், அவருக்குப் பின் அவர் சேமித்த வைத்திருந்த பணம் இந்த வாரிசுதாரருக்கு வழங்கப்படுகிறது. அதற்காகவே இந்த வாரிசுதாரர் வங்கி வாயிலாகப் பரிந்துரைக்கப்படுகிறார். அப்படியான, இந்த நடைமுறையில் மத்திய நிதி அமைச்சகம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, வாடிக்கையாளர் ஒருவர், தனது வங்கிக் கணக்கில் அதிகபட்சம் நான்கு நாமினிகளைச் சேர்க்கலாம் எனத் தெரிவித்துள்ளது.
வாடிக்கையாளர்கள் ஒரேநேரத்தில் அல்லது தொடர்ச்சியாக நான்கு பேர் வரை நாமினிகளாக நியமிக்கலாம் எனவும், வைப்பாளர்கள் நான்கு பேர் வரை நாமினிகளாக நியமித்து, ஒவ்வொரு நாமினிக்கும் உரிமைப் பங்கு அல்லது சதவீதத்தைக் குறிப்பிடலாம் எனவும், மொத்த உரிமைப் பங்கு 100% என்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் அது தெரிவித்துள்ளது. இது, நவம்பர் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் எனவும் அது தெரிவித்துள்ளது. வங்கித் துறையில் உரிமை கோரல் தீர்வுகளைச் சீரமைக்கவும், செயல்திறனை அதிகரிக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், வைப்பாளர்கள் மற்றும் அவர்களின் நாமினிகளுக்கான உரிமை கோரல் தீர்வை எளிதாக்குவதும் இதன் நோக்கமாக உள்ளது என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

