இந்தியாவில் 30 ஆண்டுகளாக திருநங்கை வேடத்தில் இருந்த வங்கதேச நபர்.. உளவுத்துறை விசாரணை!
அண்டை நாடான வங்கதேசத்தைச் சேர்ந்தவர் அப்துல் கலாம். இவர், தனது 10வது வயதில் இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்துள்ளார். மும்பையில் சுமார் 20 ஆண்டுகள் வசித்த இவர், கடந்த 10 ஆண்டுகளாக மத்தியப் பிரதேச மாநிலம் போபாலின் புத்வாரா பகுதியில் தங்கியிருந்தார். அதிகாரிகளின் பிடியில் சிக்காமல் இருக்க, கடந்த 8 ஆண்டுகளாக ’நேஹா கின்னார்’ என்ற பெயரில் தன்னை திருநங்கையாக அடையாளப்படுத்திக் கொண்டு வாழ்ந்து வந்துள்ளார். இந்த காலகட்டத்தில் ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை மற்றும் பாஸ்போர்ட் உள்ளிட்ட இந்திய ஆவணங்களை போலியாகத் தயாரித்துள்ளார். மேலும், இந்த போலியான இந்திய பாஸ்போர்ட்டைப் பயன்படுத்தி அவர் பலமுறை வங்கதேசம் சென்று திரும்பியுள்ளார். இந்நிலையில் சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிராக போபால் காவல்துறை நடத்திய அதிரடி வேட்டையின்போது கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அப்துல் கலாம் என்கிற நேஹா கின்னார் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து போலியான ஆவணங்கள் மற்றும் மொபைல் போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. எனினும், இந்த விஷயம் மிகவும் தீவிரமானது என்பதால், இதுகுறித்த விவரங்கள் முற்றிலும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.
மேலும், உள்ளூர் திருநங்கை சமூகத்தைச் சேர்ந்த யாராவது அவருக்குத் தெரிந்தோ, தெரியாமலோ உதவி செய்தார்களா என்பதை புலனாய்வாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர். திருநங்கை பெண்ணாகக் காட்டிக் கொண்ட நபரிடம் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், நேஹா பாலினரீதியாக திருநங்கையா அல்லது தனது அடையாளத்தை மறைக்க ஒருவராக மாறுவேடமிட்டு வந்தாரா என்பதைக் கண்டறிய பாலின சரிபார்ப்பு சோதனையை நடத்த போலீசார் முன்வந்துள்ளனர். அதேநேரத்தில் அதிகாரிகள் முறையாக நாடு கடத்தவும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தற்போது அப்துல் 30 நாள் காவலில் வைக்கப்பட்டுள்ளார். மேலும், அதிகாரிகள் அப்துலை அணுகுவதையும் தடைசெய்துள்ளனர், நிலையப் பொறுப்பாளர் மற்றும் இரண்டு நியமிக்கப்பட்ட பெண் அதிகாரிகள் மட்டுமே அவருடன் தொடர்பு கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.