ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை ராஜினாமா..! - ‘வாழப்போவதாக கடிதம்’
தெற்கு பெங்களூரு துணை ஆணையர் அண்ணாமலை தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
ஐபிஎஸ் அதிகாரிகளில் கம்பீரமாகவும், நேர்மையுடனும் செயல்படுபவர் என்ற பெருமை கொண்டவர் அண்ணாமலை. இவர் திடீரென தனது பதிவியை ராஜினாமா செய்திருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், “கடந்த வருடம் நான் கைலாஷ் மானசரோவர் சென்றிருந்தேன். அங்கு வாழ்க்கையின் முக்கியவத்துவம் குறித்து கண் திறந்துகொண்டது. அத்துடன் அதிகாரி முதுகார் ஷெட்டியின் மரணம் என் வாழ்வை என்னவென்று உணர்த்தியுள்ளது.
இதனால் காக்கிச்சட்டை என்ற நல்ல விசயம் அனைத்திற்கும் விடை கொடுக்கும் நேரம் வந்துவிட்டது. தேர்தல் நேரத்தில் பதவி விலகினால் அரசிற்கு அது சிரமத்தை ஏற்படுத்தும் எனத் தேர்தல் முடியும் வரை பொறுத்திருந்து ராஜினாமா செய்துள்ளேன். கடந்த ஆறு மாதங்களாக நன்கு யோசித்துதான் இந்த முடிவிற்கு வந்துள்ளேன். இனி நானும் எனது சிறந்த தோழியான மனைவியும் வாழ்வை இனிதாக கடப்போம்” என்று கூறியுள்ளார்.
அத்துடன், “நான் அடுத்து என்ன செய்யப்போகிறேன் என மக்கள் மத்தியில் கருத்துக்கள் நிலவுகிறது. நான் ஒரு சிறிய மனிதன். நான் எனது வாழ்வில் இழந்ததை எல்லாம் மீண்டும் பெற்று மகிழ்ச்சி அடையப்போகிறேன். எனது மகனுக்கு ஒரு நல்ல தந்தையாக இருக்கப்போகிறேன். அவரது வளர்ச்சியின் அனைத்து தருணங்களிலும் இருக்கப்போகிறேன்.
நான் குடும்பத்திற்கு என் திரும்பப்போகிறேன். இனிமேல் நான் காவல் அதிகாரி அல்ல. என்னுடன் பயணித்த அனைத்து அதிகாரிகள், எனக்கு கீழ்ப் பணியாற்றிய காவலர்கள் மற்றும் அவர்களின் அன்பை நான் கண்டிப்பாக இழக்கநேரும். நான் எனக்கு தெரியாமல் யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால் அதற்கு வருத்தங்களை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
முதுகார் ஷெட்டி என்பவர் 1999ஆம் ஐபிஎஸ் அதிகாரியாக தேர்ச்சி பெற்று, கர்நாடகாவில் அதிகாரியாக பணியாற்றிவர். அண்ணாமலைக்குப் பிடித்த அதிகாரியான அவர் கடந்த ஆண்டு உயிரிழந்தார். உயிரிழக்கும்போது அவருக்கு 47 வயது.