மணப்பெண் இல்லாமல் நடந்த திருமணம்: மகனின் ஆசையை நிறைவேற்றிய தந்தை!
குஜராத்தில் மன வளர்ச்சி குன்றிய இளைஞர் ஒருவருக்கு மணப்பெண் இல்லாமல் திருமணவிழா நடத்தப்பட்டது.
குஜராத் மாநிலம் சபர்காந்தா மாவட்டத்தைச் சேர்ந்த அஜய் பரோட் என்பவர் மனவளர்ச்சி குன்றியவர். இவருக்கு 27 வயதாகும் நிலையில், தனது சகோதரன் திருமணத்தை கண்ட அஜய்க்கு, இதுபோன்று திருமண விழா தனக்கும் நடக்க வேண்டுமென விருப்பம் வந்தது. தனது விருப்பத்தை தந்தையிடம் தெரிவித்துள்ளார் அஜய். அவரது ஆசையை நிறைவேற்றும் விதமாக அஜய்க்கு தடபுடலாக திருமண ஏற்பாடுகள் நடந்தன.
வழக்கம் போல் மெகந்தி நிகழ்ச்சி, ஆட்டம் பாட்டம் என திருமண விழா நடைபெற்றது. ஆனால் திருமண விழாவில் மணமகள் மட்டும் கிடையாது. விழாவின் போது குஜராத்தி முறைப்படி மணமகனை குதிரையில் ஊர்வலமாக பேண்டு வாத்தியங்களுடன் அழைத்து சென்றனர். இந்த திருமண விழாவில் 200க்கும் மேற்பட்ட உறவினர்களும், நண்பர்களும் கலந்து கொண்டனர்.
இந்த திருமணவிழா குறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு பேசிய அஜயின் தந்தை, ''மற்றவர்களின் திருமணத்தில் கலந்துகொண்டு மகிழ்ச்சியடையும் அஜய், அவனது திருமணம் குறித்து என்னிடம் கேட்டான். என்னால் எந்த பதிலும் சொல்லமுடியவில்லை. அவனுக்கு ஏற்ற ஜோடியை கண்டுப்பிடிப்பது கடினமானதாக இருந்தது.
எங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து முடிவெடுத்து அஜய்க்கு திருமணம் செய்யலாம் என்று முடிவெடுத்தோம். ஆனால் மணமகள் இல்லை. அவனது ஆசையாவது நிறைவேறட்டும் என்று யோசித்தோம். இந்த சமூகம் என்ன சொல்லும் என்பதை பற்றி எனக்கு கவலை இல்லை. ஆனால் என் மகனின் கனவை நிறைவேற்றி இருக்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்