"பஜ்ரங் தள உறுப்பினரை கொன்றது முஸ்லிம்கள்தான்" - கர்நாடக அமைச்சர் சர்ச்சை குற்றச்சாட்டு

"பஜ்ரங் தள உறுப்பினரை கொன்றது முஸ்லிம்கள்தான்" - கர்நாடக அமைச்சர் சர்ச்சை குற்றச்சாட்டு
"பஜ்ரங் தள உறுப்பினரை கொன்றது முஸ்லிம்கள்தான்" - கர்நாடக அமைச்சர் சர்ச்சை குற்றச்சாட்டு

கர்நாடக மாநிலம் ஷிவமோகாவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள பஜ்ரங்தள் உறுப்பினர் ஹர்ஷாவின் கொலைக்கு “முஸ்லீம் குண்டர்கள்” காரணம் என்று கர்நாடக அமைச்சர் ஈஸ்வரப்பா குற்றம் சாட்டியுள்ளார்.

ஷிவமோகாவை சேர்ந்த பஜ்ரங்தள் அமைப்பின் உறுப்பினர் 26 வயதான ஹர்ஷா, நேற்று மாலை அவருக்குத் தெரிந்த நான்கு அல்லது ஐந்து நபர்களால் கத்தியால் குத்தி கொல்லப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பேசிய கர்நாடகாவின் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா, "கொலை செய்யப்பட்ட ஹர்ஷா ஒரு நல்ல தொண்டர், நேர்மையான இளைஞர். நேற்றிரவு முஸ்லிம் குண்டர்கள் அவரைக் கொன்றனர். சமீபத்தில், காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் ஷிவமோகாவில் உள்ள கல்லூரியில் தேசியக் கொடிக்கு பதிலாக காவி கொடி ஏற்றப்பட்டதாகவும், ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டத்திற்காக சூரத்தில் ஒரு தொழிற்சாலையில் சுமார் 50 லட்சம் காவி துண்டுகள் ஆர்டர் செய்யப்பட்டன என்றும் குற்றம் சாட்டினார். அவர் இந்த அறிக்கைகளை வெளியிட்ட பிறகு குண்டர்வாதம் அதிகரித்துள்ளது, குண்டர்களின் செயல்கள் தொடர நாங்கள் அனுமதிக்க மாட்டோம். கொல்லப்பட்டவரின் குடும்பத்திற்கு எங்களால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்வோம்" என்று கூறினார். 

இது தொடர்பாக பேசிய காங்கிரஸ் தலைவர் சிவக்குமார், "ஈஸ்வரப்பா ஒரு மனநிலை பாதிக்கப்பட்டவர். அவரது நாவுக்கும் மனதுக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது, பாஜக தலைமை அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்" என்று தெரிவித்தார்

நேற்றிரவு 9 மணியளவில் ஹர்ஷாவின் மரணத்திற்குப் பிறகு தீ வைப்பு சம்பவங்கள் காரணமாக ஷிவமோகாவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. பெரிய கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த கொலைவழக்கு தொடர்பாக பேசிய கர்நாடக உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா, " இந்த கொலைக்கு பின்னணியில் உள்ளவர்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை, 4-5 இளைஞர்கள் கொண்ட கும்பல் அவரைக் கொன்றது. இந்தக் கொலைக்குப் பின்னணியில் எந்த அமைப்பும் இருப்பதாக தெரியவில்லை. ஷிவமோகாவில் சட்டம் ஒழுங்கு நிலைமை கட்டுக்குள் உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நகர எல்லைகளில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இரண்டு நாட்களுக்கு மூடப்பட்டுள்ளன" என்றார்

இது தொடர்பாக போலீஸ் உயர் அதிகாரி, "நாங்கள் கொலை தொடர்பான துப்புகளைக் கண்டுபிடித்துள்ளோம், குற்றம் சாட்டப்பட்டவர்களைக் கைது செய்ய நெருங்கிவிட்டோம். இதற்கும் ஹிஜாப் சர்ச்சைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஹர்ஷாவும், அவரை கொன்ற இளைஞர் கும்பலும் ஒருவரையொருவர் ஏற்கனவே தெரிந்தவர்கள்தான். இது பழைய போட்டியின் விளைவாக நடந்த கொலை என தெரிகிறது" என்று கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com