’ஆதாரமில்லாமல் வழக்குப் பதிவு’ - திரிபுரா போலீசால் கைதான 2 பெண் ஊடகவியலாளர்களுக்கு பிணை

’ஆதாரமில்லாமல் வழக்குப் பதிவு’ - திரிபுரா போலீசால் கைதான 2 பெண் ஊடகவியலாளர்களுக்கு பிணை

’ஆதாரமில்லாமல் வழக்குப் பதிவு’ - திரிபுரா போலீசால் கைதான 2 பெண் ஊடகவியலாளர்களுக்கு பிணை

திரிபுரா போலீசாரால் கைது செய்யப்பட்ட இரண்டு பெண் ஊடகவியலாளர்களுக்கு திங்கட்கிழமையன்று பிணை அளிக்கப்பட்டுள்ளது. சம்ரிதி சகுனியா மற்றும் சுவர்ணா ஜா  ஆகிய இருவரும் கோமதி மாவட்ட மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். திரிபுரா மாநிலத்தில் சமீபத்தில் நடந்த கலவரம் குறித்து விஷமத்தனமான புரளிகளை பரப்பியதாக இவர்களுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மும்பையில் இருந்து செயல்படும் HW நியூஸ் நெட்வொர்க் என்கிற நிறுவனத்தைச் சேர்ந்த இந்த இரண்டு பத்திரிகையாளர்களும் திரிபுரா மாநிலத்தில் நடந்த வன்முறை குறித்து தகவல்களை சேகரிக்க சென்றதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. அங்கிருந்து அவர்கள் அண்டை மாநிலமான அசாம் சென்றபோது அவர்களை அசாம் போலீஸ் தடுத்து நிறுத்தியது. திரிபுரா மாநில போலீசாரின் கோரிக்கை அடிப்படையில் அவர்களை தடுத்து நிறுத்தியதாக அசாம் போலீஸ் தெரிவித்துள்ளது.

பின்னர் அசாம் மாநிலத்துக்கு சென்ற திரிபுரா மாநில போலீஸ் படை இரண்டு பத்திரிகையாளர்களையும் கைது செய்தது. அசாம் மாநிலத்தில் உள்ள கரீம்கஞ் பகுதியில் அவர்கள் கைது செய்யப்பட்டதாக திரிபுரா மாநில போலீசார் தெரிவித்துள்ளனர்.

பின்னர் சம்ரிதி சகுனியா மற்றும் சுவர்ணா ஜா திரிபுராவில் உள்ள கோமதி மாவட்ட மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். ஒரு மசூதி எரிக்கப்பட்டது என்றும் புனித குர்ஆன் நூல் சேதப்படுத்தப்பட்டது என்றும் விஷமத்தனமான புரளிகளை இவர்கள் பரப்பியதாக போலீசார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் இவர்களுக்கு எதிராக புகார் அளித்துள்ளார் என போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த தவறான புரளிகள் இணையதளம் மூலம் பரவியதால் மகாராஷ்டிர மாநிலத்தில் கலவரம் ஏற்பட்டு அங்கே பல சொத்துக்களுக்கு சேதம் விளைந்திருக்கிறது என்றும், பலர் காயமடைந்திருக்கிறார்கள் என்றும் பல்வேறு அரசியல் தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். கலவரத்தில் ஈடுபட்டதாக பலரை மகாராஷ்டிர மாநில போலீசார் கைது செய்து விசாரணை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் சம்ரிதி சகுனியா மற்றும் சுவர்ணா ஜா அசாம் மாநிலத்துக்குள் நுழைந்து அங்கிருந்து விமானம் மூலமாக மும்பை தப்பிச்செல்ல திட்டமிட்டிருந்ததாக திரிபுரா போலீஸார் குற்றம் சாட்டியுள்ளனர். திரிபுரா மாநிலத்தில் இருந்து விமானம் மூலம் பயணிக்காமல், அசாம் மாநிலத்தில் நுழைந்து அங்கிருந்து விமானம் மூலம் பயணிக்க திட்டமிட்டதிலிருந்து இவர்கள் போலீசாரிடம் இருந்து தப்ப முயன்றது தெளிவாக தெரிகிறது என திரிபுரா போலீசார் வலியுறுத்தியுள்ளனர்.

இரண்டு மதங்களிடையே வெறுப்பைத் தூண்டும் வகையில் சம்ரிதி சகுனியா இணையதளத்தில் பதிவிட்டுள்ளார் என்பது திரிபுரா போலீசாரின் குற்றச்சாட்டு. இது தொடர்பாக அவர் வெளியிட்ட காணொளியும் சரியானது அல்ல என திரிபுரா போலீசார் தெரிவித்துள்ளனர். பல பத்திரிக்கையாளர்கள் அமைப்புகள் சம்ரிதி சகுனியா மற்றும் சுவர்ணா ஜா கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்திருக்கும் நிலையில், விசாரணை தொடர்வதாக திரிபுரா போலீசார் தெரிவித்துள்ளனர்.

பெண் பத்திரிக்கையாளர்கள் சார்பில் பிஜுஷ் பிஸ்வாஸ் என்ற வழக்கறிஞர் ஆஜரானார். இரு பெண் பத்திரிக்கையாளர்களும் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் தகவல்களை பரப்பியதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று அவர் வாதிட்டார். மேலும், “அவர் மீதான புகார்கள் முற்றிலும் அடிப்படை ஆதாரமற்றது. காவல்துறையினர் உள்நோக்கத்துடன் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கிற்கு எதிராக மனுத்தாக்கல் செய்ய தன்னுடைய தரப்பினர் உச்சநீதிமன்றம் செல்ல வேண்டியுள்ளது. அதனால் பிணை வேண்டும்” என்று வழக்கறிஞர் வலியுறுத்தினார். இதனையடுத்து இரு பெண் பத்திரிக்கையாளர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

- கணபதி சுப்ரமணியம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com