உலக மேடையில் வீரர்கள்.. நிதி தராமல் கைவிட்டதா இந்திய அரசு? சர்ச்சையில் SAI.. பின்னணி என்ன?
செய்தியாளர் - ராஜ்குமார். ர
சர்வதேச அளவிலான போட்டிகளில் இந்தியாவுக்காக விளையாடும் வீரர்களுக்குத் தேவையான வசதிகளையும், நிதி உதவிகளையும் அரசு வழங்குவது வழக்கம். ஆனால், வெளிநாட்டுப் போட்டிகளில் பங்கேற்கச் சென்ற இந்திய பேட்மிண்டன் வீரர்களுக்குப் நிதி உதவி கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீரர்களான பி.வி.சிந்து, லக்ஷயா சென் உள்ளிட்டோர் சமீபத்தில் ஐரோப்பிய நாடுகளான பின்லாந்து, டென்மார்க், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியில் நடைபெற்ற சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்றனர்.
ஆனால், இந்தப் போட்டித் தொடர்களுக்கான இந்திய அணியின் நிதி உதவி கிடைக்கவில்லை என்றும், இதனால் வீரர்கள் தங்களது பயணம், உணவு, தங்குமிடம் உள்ளிட்ட செலவுகளைத் தாங்களே ஏற்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் இதன் காரணமாக அவர்களுடன் செல்ல வேண்டிய பயிற்சியாளர்களும் பாதிக்கப்பட்டதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த விவகாரம் விளையாட்டு வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, நிதி உதவி கிடைக்காத தகவலைக் கேட்டு அதிர்ச்சியடைந்ததாகக் கூறியுள்ளார். இதற்கு முன்பு இதுபோன்ற சூழலை, தாம் எதிர்கொண்டதில்லை என்றும், நிதி எப்படி கிடைக்காமல் போனது எனத் தனக்குப் புரியவில்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும், தனக்கான சில செலவுகளைச் சொந்தப் பணத்தில் சமாளித்ததோடு, சில அமைப்பின் உதவியையும் பெற்றதாக தெரிவித்ததாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், வீரர்களுக்கு நிதி உதவி கிடைக்காதது தொடர்பாக இந்திய விளையாட்டு ஆணையமான SAI விளக்கம் அளித்துள்ளது. அதன்படி, சர்வதேசப் போட்டிகளுக்கான நிதி உதவியைப் பெறுவதற்கு, போட்டி தொடங்குவதற்கு குறைந்தது 30 நாட்களுக்கு முன்பாக வீரர்களின் பெயர்கள் உள்ளிட்ட விவரங்களுடன் முன்மொழிவைச் சமர்ப்பிக்க வேண்டும். இதற்கு முன்பு 90 நாட்கள் மற்றும் 60 நாட்களாக இருந்த காலக்கெடு, விளையாட்டு அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று 30 நாட்களாகக் குறைக்கப்பட்டதாகவும் ஆனால், இந்திய பேட்மிண்டன் சங்கமான BAI உரிய காலக்கெடுவுக்குள் நிதி கோரும் முன்மொழிவைச் சமர்ப்பிக்கவில்லை. இதன் காரணமாகவே நிதி உதவி வழங்க முடியவில்லை. மேலும், இனிவரும் போட்டிகளுக்கான நிதி உதவி வழங்கப்படும் என்றும், ஏற்கெனவே வீரர்கள் செலவிட்ட தொகையைத் திருப்பி வழங்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதா கூறப்பட்டுள்ளது.
ஒருபுறம் நிதி உதவி கிடைக்காததால் வீரர்கள் சிரமங்களை எதிர்கொண்டாலும், சர்வதேசப் போட்டிகளில் தங்களது திறமையை நிரூபித்துள்ளனர். ஜெர்மனியில் நடைபெற்ற ஹைலோ ஓபன் போட்டியில் பி.வி.சிந்து மற்றும் லக்ஷயா சென் இருவரும் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்துள்ளனர். சர்வதேச அரங்கில் இந்தியாவுக்காக வெற்றிகளைக் குவிக்க வீரர்கள் தொடர்ந்து போராடி வரும் நிலையில், அவர்களுக்குத் தேவையான நிதி உதவியை உரிய நேரத்தில் வழங்குவதில் ஏற்பட்டுள்ள சிக்கல் தற்போது விவாதப் பொருளாகியுள்ளது.
