பா.ஜ.க.வின் மற்றொரு எம்.எல்.ஏ. ராஜினாமா: 48 மணிநேரத்தில் 7 எம்.எல்.ஏக்கள் விலகல்
உத்தரப்பிரதேச மாநிலத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து, ஆளும் கட்சியான பா.ஜ.க.வில் இருந்து இதுவரை 2 அமைச்சர்கள் மற்றும் 7 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்துள்ளனர்.
இந்தியாவில் அதிக சட்டப்பேரவை தொகுதிகளை கொண்ட உத்தரப்பிரதேசத்தின் தேர்தல், மிகவும் முக்கியம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இதனால் உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க, தேசிய கட்சிகளான காங்கிரஸ், பா.ஜ.க. மற்றும் மாநிலக் கட்சிகளான சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளிடையே போட்டிகள் நிலவுகின்றன. உத்தரப்பிரதேச மாநிலத்தில் மொத்தமுள்ள 403 தொகுதிகளுக்கு, வரும் பிப்ரவரி 10-ம் தேதி முதல், மார்ச் 7-ம் தேதி வரை, 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. மார்ச் 10-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் கடந்த சனிக்கிழமை அன்று தெரிவித்தது.
இந்நிலையில், இந்தத் தேர்தலில் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள பா.ஜ.க. போராடி வருகிறது. ஆனால் பா.ஜ.க.வுக்கு அதிர்ச்சி தரும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன. அதாவது, தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து, இதுவரை 7 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க. விலிருந்து விலகியுள்ளனர்.
கடந்த 2 நாட்களுக்கு முன்னதாக, பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரின் முக்கியத் தலைவராக கருதப்படும் அமைச்சர் சுவாமி பிரசாத் மவுர்யா, தனது பதவியை ராஜினாமா செய்து, பா.ஜ.க.விலிருந்து விலகினார். அவரைத்தொடர்ந்து, மவுர்யாவுக்கு ஆதரவு அளித்து, ரோஷன் லால் வர்மா, பகவதி பிரசாத் சாகர், பிரஜேஷ் பிரஜபதி ஆகிய 3 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.விலிருந்து விலகி சமாஜ்வாதியில் இணைந்துள்ளனர்.
அதேபோல், பா.ஜ.க. எம்.எல்.ஏ.வான தாரா சிங் சவுகான், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து சமாஜ்வாதி தலைவர் அகிலேஷிடம் சரணடைந்துள்ளார். மேலும், கடந்த புதன்கிழமை, பா.ஜ.க. எம்.எல்.ஏ. அவதார் சிங் பாடானா கட்சியிலிருந்து விலகி, சமாஜ்வாதி கட்சியின் கூட்டணியான ராஷ்ட்ரீய லோக் தளத்தில் இணைந்தார். இப்படி 2 நாட்களில் 6 பேர் விலகியது பாஜகவுக்கு அதிர்ச்சியையும், பின்னடைவையும் கொடுத்தநிலையில், இன்று பா.ஜ.க. கட்சியைச் சேர்ந்த மற்றொரு எம்.எல்.ஏ முகேஷ் வர்மா ராஜினாமா செய்துள்ளார். பா.ஜ.க.விலிருந்து இருந்து, 48 மணி நேரத்தில் விலகியுள்ள 7-வது எம்.எல்.ஏ முகேஷ் வர்மா ஆவார். உத்தரப்பிரதேசத்தில் 48 மணி நேரத்தில், 2 அமைச்சர்களும், 5 பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களும் விலகி உள்ளதால், ஆளுங்கட்சி அதிர்ச்சி அடைந்துள்ளது.