பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி மற்றும் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பிற தலைவர்கள் மீதான வழக்குகள் தொடர்பான தீர்ப்பை, செப்டம்பர் 30 க்குள் வழங்க, லக்னோவில் உள்ள சிபிஐ விசாரணை நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1992 ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிப்பு வழக்கில் விசாரணை முடிவடைவதற்கான காலம் கடந்த மே மாதத்துடன் முடிவடைந்த நிலையில், உச்ச நீதிமன்றம், மேலும் மூன்று மாத கால அவகாசம் அளித்து, ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் தீர்ப்பை வழங்க வேண்டும் என்று கூறியது. இனி எந்த கால தாமதமும் இருக்கக்கூடாது எனவும் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்திற்கு அறிவுறுத்தியிருந்தது.
இந்நிலையில், விசாரணை நடவடிக்கைகளின் போது தாக்கல் செய்யப்படும் ஆதாரங்களை பதிவு செய்வதற்கும், விண்ணப்பங்களை பரிசீலிப்பதற்கும், வீடியோ கான்பரன்சிங்கின் வசதிகளைப் பெற சிறப்பு நீதிபதிக்கு சுட்டிக்காட்டியது. இதையடுத்து ஜூன் மாதம் முதல் வழக்கு விசாரணையை தீவிரமாக நடத்தி வந்த சிபிஐ சிறப்பு நீதிமன்றம், அனைத்து வழக்கு விசாரணைகளையும் முடித்துள்ளது.
இதனால் தீர்ப்பை வழங்குவதற்காக மேலும் ஒரு மாதம் காலம் நீட்டிப்பு கூறியதை அடுத்து, உச்சநீதிமன்றம் செப்டம்பர் 30 வரை காலக்கெடுவை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.