பாபர் மசூதி வழக்கில் அத்வானி உள்ளிட்ட 12 பேருக்கு ஜாமின்
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி உள்ளிட்ட 12 பேருக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.
பாபர் மசூதி கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி இடிக்கப்பட்டது. இதுதொடர்பான வழக்கில் இருந்து அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்டோரை ரேபரேலி நீதிமன்றம் விடுவித்தது. இதை எதிர்த்து சிபிஐ வழக்கு தொடர்ந்திருந்தது. இதை விசாரித்த உச்சநீதிமன்றம் மீண்டும் வழக்கை தொடர உத்தரவிட்டதுடன் 2 ஆண்டுகளில் வழக்கை முடிக்கவும் அறிவுறுத்தியது.
அதன்படி பாபர் மசூதி இடிப்பு வழக்கு லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த விசாரணையின் போது அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்ட தலைவர்கள் வரும் 30-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டிருந்தார். அதனையடுத்து அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்டோர் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜராயினர். அப்போது அத்வானி உள்ளிட்ட 12 பேரும் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்தனர். இதனை ஏற்றுக்கொண்ட சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி, அத்வானி, உமாபாரதி உள்ளிட்ட 12 பேருக்கும் ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.