வெளியாகும் அயோத்தி தீர்ப்பு : தெரிந்துகொள்ள வேண்டியது என்ன..?

வெளியாகும் அயோத்தி தீர்ப்பு : தெரிந்துகொள்ள வேண்டியது என்ன..?
வெளியாகும் அயோத்தி தீர்ப்பு : தெரிந்துகொள்ள வேண்டியது என்ன..?

அயோத்தி வழக்கில் நாளை காலை உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கவுள்ளது.

இந்தியாவில் நீண்ட நாட்களாக இழுபறியில் இருக்கும் வழக்கு என்றால் அனைவருக்கும் நினைவுக்கு வருவது அயோத்தி வழக்கு தான். இந்த வழக்கில் 2010ஆம் ஆண்டு அலகாபாத் நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் மேல்முறையீட்டு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் நீண்ட காலமாக விசாரிக்கப்பட்டு நாளை தீர்ப்பு வழங்கப்படுகிறது. தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முன்பாக அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய சில வரலாற்று பதிவுகளை காண்போம்.

ராம ஜென்ம பூமி மற்றும் பாபர் மசூதி பிரச்னை என்றால் என்ன ?

ராமாயணத்தின் படி, ராமர் அயோத்யா என்னும் இடத்தில் உள்ள சராயு நதிக்கரையோரம் பிறந்ததாக கூறப்படுகிறது. ராமர் பிறந்த தேசத்தை தான் ராமஜென்ம பூமி என்று ஒருதரப்பினர் கூறுகின்றனர். தற்போது அது உத்தரப்பிரதேச மாநிலமான அயோத்தியில் இருப்பதாகவும் அவர்கள் சொல்கின்றனர். அதேசமயம் இந்த இடத்தில் 1528-ஆம் ஆண்டே பாபர், மசூதி கட்டிவிட்டதாக கூறப்படுகிறது. இது தங்களுக்கு வழிபாட்டு தளத்திற்கு சொந்தமானது என்று மற்றொரு மதத்தினர் கூறுகின்றனர். பின்னர் 1992 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி அந்த மசூதி இடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அயோத்தி வழக்கின் முக்கிய மனுதாரர்கள் யார் ?

உச்சநீதிமன்றத்திற்கு முன்னதாக அயோத்தி வழக்கு தொடர்பான விசாரணை அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. ராம்லல்லா விராஜ்மான், நிர்மோகி அகரா மற்றும் உத்தரபிரதேசத்தின் சன்னி வக்பு வாரியம் உள்ளிட்ட அமைப்புகள் இந்த வழக்கை தொடுத்திருந்தன. இந்த வழக்கில் 2010-ஆம் ஆண்டு தீர்ப்பளித்த அலகாபாத் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகொண்ட அமர்வு, வெவ்வேறான கருத்துகளை முன்வைத்திருந்தனர். மூன்று அமைப்புகளும் சர்ச்சைக்குரிய நிலத்தை சமமாம பிரித்துக்கொள்ளுமாறு அப்போது தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது. இதனை எதிர்த்து தான் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு தற்போது தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.

தொல்லியல் துறை நிலம் குறித்து சொல்வதென்ன ?

இந்த நிலம் யாருக்கு சொந்தமானது என்று பல கருத்து முரண்பாடுகள் இருந்தாலும், தொல்லியல் தகவல்களும் சில கருத்துகளை முன்வைக்கின்றன. ஐரோப்பிய புவியியல் ஆய்வாளர் ஜோசப் டைபெந்தாலரை தனது ஆராய்ச்சியின் படி, 1786-ம் ஆண்டிற்கு முன்னர் அங்கு ஒரு கட்டடம் கட்டப்பட்டிருக்கலாம் என்றும், 1528ம் ஆண்டில் குறிப்பிட்ட மன்னர் கட்டப்பட்டதாக கூறப்படும் மத வழிபாட்டு கட்டடம் கட்டப்பட்டதற்கு ஆதாரம் ஏதும் இல்லை என்று தெரிவித்திருந்தார். அத்துடன் உள்ளே இருக்கும் வழிபாடு ஒன்றாகவும், அதன் சுற்றுப்புற சுவர்களில் உள்ள வழிபாட்டு உருவங்கள் மற்றொரு மதத்தை சேர்ந்ததாகவும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

2010ஆம் ஆண்டு அலகாபாத் வழங்கிய தீர்ப்பு சொல்வதென்ன ?

2010ஆம் ஆண்டு அலகாபாத் நீதிமன்றம் மூன்று அமைப்புகளும் சமமாக நிலத்தை பகிர்ந்துகொள்ளுமாறு தெரிவித்திருந்தது. நீதிபதி அகர்வால், நீதிபதி ஷர்மா மற்றும் நீதிபதி கான் வெவ்வேறான கருத்துக்களை தெரிவித்திருந்தனர். 200 ஆண்டுகளாக இந்த இடம் ஒரு மதத்தினரின் வழிபாட்டு தலமாக அழைக்கப்பட்டதாக நீதிபதி அகர்வால் கூறியிருந்தார். குறிப்பிட்ட மதத்தின் வழிபாட்டு தலத்தை இடித்தே, மற்றொரு வழிபாட்டு தலம் கட்டப்பட்டதற்கான ஆதாரங்கள் இருப்பதாக நீதிபதி ஷர்மா கூறியிருந்தார். நீதிபதி கான் கூறும்போது, ஒருவரின் இடத்தில் மற்றொரு வழிபாட்டு தலம் கட்டுப்பட்டால், அது முக்கியத்துவம் அற்றதாக கருதிவிட முடியாது எனக்கூறியிருந்தார்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன ?

தீர்ப்பு நாளை வழங்கப்படுவதையொட்டி, உத்தரப் பிரதேசம் முழுவதும் கண்காணிப்பு வளையத்திற்குள் வந்துள்ளது. அயோத்தி பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பது மட்டுமின்றி, அங்கு சிறப்பு பாதுகாப்பு படையினர் மற்றும் காவலர்கள் குவிக்கப்பட்டிருக்கின்றனர். அனைத்து மாநில அரசுகளும் சட்ட ஒழுங்கை தீவிரமாக கண்காணிக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. நாடு முழுவதும் பாதுகாப்புகள் மற்றும் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பதட்டமான கருத்துக்களை யாரும் பகிர வேண்டாம் என நீதிமன்ற அறிவுறுத்தியிருக்கிறது. மக்கள் கூடும் இடங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com