
அயோத்தி வழக்கில் இன்று காலை 10.30 மணிக்கு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது. இதையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்ற வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது. சமரசக் குழுவின் முயற்சி தோல்வி அடைந்த நிலையில், 40 நாட்கள் தொடர்ந்து விசாரணை நடைபெற்றது. இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் தேதி அறிவிக்காமல் தீர்ப்பை ஒத்திவைத்திருந்தனர்.
இந்நிலையில், அயோத்தி வழக்கில், இன்று காலை 10.30 மணிக்கு உச்ச நீதிமன்றம் தீர்ப்பை வழங்குகிறது. அரசியல் சாசன அமர்வில் இடம்பெற்றுள்ள தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, அசோக் பூஷண், டி.ஒய்.சந்திரசூட், எஸ்.அப்துல் நஸீர் ஆகியோர் தீர்ப்பு வழங்கவுள்ளனர். நாடே எதிர்பார்க்கும் அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியாவதையொட்டி அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் 1லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 15 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சென்னையின் முக்கிய இடங்களில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அனைத்து விடுதிகளிலும் காவல்துறையினர் சோதனைக்கு உட்படுத்தி வருகின்றனர். கட்சி அலுவலகங்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் வீடுகளுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.