அயோத்தியில் ராமர் கோயிலில் முதல் தீபாவளி! தீப உற்சவ விழாவில் 2 கின்னஸ் சாதனைகள் படைத்து அசத்தல்!
அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்பட்ட பிறகு முதன்முறையாக நடைபெற்ற தீப உற்சவ விழாவில், இரண்டு கின்னஸ் சாதனைகள் படைக்கப்பட்டன.
உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்தியில் தீப உற்சவம் என்ற பெயரில் தீபாவளி கொண்டாடப்படுகிறது. ராமர் கோயில் திறக்கப்பட்ட பிறகு நடைபெறும் முதல் தீப உற்சவம் என்பதால் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சரயு நதிக்கரை முழுவதும் அகல் விளக்குகளால் ஒளிர்ந்தது.
சரயு நதிக்கரையில் 25 லட்சத்து 12 ஆயிரத்து 585 அகல் விளக்குகள் ஏற்றப்பட்டன. இதே போன்று, சரயு படித்துறையில் வண்ணமயான லேசர் காட்சிகள் மாயாஜாலம் காட்டின. கண்களைக் கவர்ந்த இந்த லேசர் ஷோவின்போது, ராமாயண காட்சிகளும் நிகழ்த்தப்பட்டன. ராமரின் திருமணம், வனவாசம், இலங்கை பயணம், ராவண வதம் போன்ற பல்வேறு நிகழ்வுகள் காட்சிப்படுத்தப்பட்டன. மியான்மர், நேபாளம், தாய்லாந்து, மலேசியா, கம்போடியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளில் வந்த கலைஞர்களின் கலைநிகழ்ச்சிகளும் விழாவை அலங்கரித்தன. சரயு நதியில் ஆயிரத்து 121 பேர் ஒன்றாக ஆரத்தி மேற்கொண்டனர்.
இது கின்னஸ் உலக சாதனையாக மாறியது. ஒரே நேரத்தில் அதிக அகல் விளக்குகள் ஏற்பட்ட நிகழ்வு என்ற உலக சாதனையும் படைக்கப்பட்டது. இரண்டு கின்னஸ் உலக சாதனைகளுக்கான சான்றிதழ்களையும் உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பெற்றுக் கொண்டார்.