அயோத்தியில் ராமர் கோயில் கட்ட லாரிகளில் கற்கள் இறக்கப்பட்டதால் பதற்றம்!
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட கற்கள் கொண்டு வரப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ராமர் கோயில் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், கோயில் கட்டுவதற்கான கற்கள் 3 லாரிகளில் கொண்டுவரப்பட்டுள்ளன. அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என இந்துத்துவா அமைப்பினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அயோத்தியில் மிகப்பெரிய அளவில் ராமர் கோயில் கட்டுவதில் இந்து அமைப்புகளும், பாஜகவும் உறுதியாக உள்ளன. இத்தகைய சூழலில் வரும் 9 ஆம் தேதி குரு பூர்ணிமா முடிந்ததும் சீதாபூரில் உள்ள ஆசிரமத்தில், ராமர் கோயில் கட்டுவது தொடர்பாக அனைத்து மாநில சாமியார்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இத்தகவலை சீதாபூர் நர்தானந்த் ஆசிரமத்தின் தலைவரான சுவாமி விதய் சைதன்ய மகராஜ் தெரிவித்துள்ளார்.
அயோத்தியில் பாபர் மசூதி உள்ள இடத்தில்தான் ராமர் பிறந்தார் என்ற ஒரு கருத்து நிலவுகிறது. எனவே அங்குள்ள பாபர் மசூதியை இடித்துவிட்டு, ராமர் கோவில் கட்ட வேண்டும் என்று பாஜகவும், இந்து அடிப்படைவாத அமைப்புகளும் வலியுறுத்தி வருகின்றன. 1992 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி கரசேவகர்களால் பாபர் மசூதியின் மூன்றடுக்கு கோபுரங்கள் இடிக்கப்பட்டன. இந்த இடிப்பு சம்பந்தமான வழக்கும், பாபர் மசூதி உள்ள இடம் யாருக்கு சொந்தமானது என்ற வழக்கும் இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் லாரிகளில் கற்கள் வந்து இறக்கப்பட்டதால் அங்கு பதட்டமான சூழல் நிலவுகிறது.