ஆக்சியம்-4 திட்டம் | விண்வெளிக்குச் சென்ற சுபன்ஷு சுக்லா.. திரும்பும் தேதி அறிவிப்பு
ஆக்சியம்-4 திட்டத்தின் மூலம் இந்தியாவைச் சேர்ந்த சுபன்ஷு சுக்லா, போலந்தைச் சேர்ந்த ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி, ஹங்கேரியைச் சேர்ந்த திபோர் கபு மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த பெக்கி விட்சன் ஆகிய 4 விண்வெளி வீரர்கள், நீண்ட தடைகளுக்குப் பின், இறுதியாக கடந்த ஜூன் மாதம் 25-ஆம் தேதி சர்வதேச விண்வெளி மையத்திற்கு புறப்பட்டுச்சென்றனர். இந்த விண்வெளிப் பயணத்தின் மூலம், குரூப் கேப்டன் சுபன்ஷு சுக்லா விண்வெளிக்குச் செல்லும் இந்தியாவின் இரண்டாவது விண்வெளி வீரர் என்ற பெருமை பெற்றார். 15 நாட்களான இந்தப் பயணத்தில், ஆக்ஸியம்-4 மிஷனின் நான்கு பேர் கொண்ட குழுவினர் 60 அறிவியல் பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக, சுபன்ஷு சுக்லா அங்கு பல்வேறு ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில், மனித செரிமான அமைப்பு விண்வெளியின் தனித்துவமான சூழலுக்கு எவ்வாறு பொருந்துகிறது என்பதை விளக்கும் இளம் இந்திய மாணவர்களை இலக்காகக் கொண்ட ஒரு கல்வி வீடியோவை சுக்லா படமாக்கினார். இந்த நிலையில், சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து ஜூலை 14ஆம் தேதி இந்திய நேரப்படி மாலை 4.35 மணிக்கு சுபான்ஷு சுக்லா பூமிக்குத் திரும்ப உள்ளார். அப்போது, 17 மணி நேரப் பயணத்திற்குப் பின் டிராகன் விண்கலம் கடலில் விழும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.