சீட் பெல்ட் அணிவதால் என்ன நன்மை? - சிறப்பான வீடியோ காட்சி
காரில் சீட் பெல்ட் அணிவதால் ஏற்படும் நன்மை குறித்து புரிய வைக்கும் விதமாக ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களுக்கு கடுமையாக அபராதம் விதிக்கும் புதிய மோட்டார் வாகன சட்டம் கடந்த 1ஆம் தேதி முதல் பல்வேறு மாநிலங்களில் அமலுக்கு வந்தது. இதன்மூலம் ஹெல்மெட் அணியாதவர்களுக்கு போடப்படும் அபராத தொகையும் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் புதிய சட்டம் அமலுக்கு வந்தபிறகும் போக்குவரத்து விதிமுறைகள் குறித்து காவல்துறையினர் மக்களுக்கு விழிப்புணர்வு செய்து வருகின்றனர். இதற்காக பேரணி மற்றும் பல விசித்திரமான முறைகளை போக்குவரத்து காவல்துறை கையாண்டு வருகிறது.
அந்த வகையில் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் காரில் சீட் பெல்ட் அணிவதால் ஏற்படும் நன்மையை உணர்த்தும் வகையில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். அதில், ஒருவர் தனது காரில் சீட் பெல்ட் அணிந்து நெடுஞ்சாலை ஒன்றில் பயணிக்கிறார். அப்போது திடீரென சாலையின் மறுபக்கத்திலிருந்து லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கார் மீது வந்து மோதுகிறது. இந்த காரின் ஓட்டுநர் சீட் பெல்ட் அணிந்துள்ளார். கூடவே ஏர்பேக் வெளியே வந்து அவரைக் காப்பாற்றுகிறது. இதனால் அவரின் உயிருக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இந்தக் காட்சிகள் வீடியோவில் பதிவாகியுள்ளது.
இந்தப் பதிவில் கார் ஓட்டுபவர்கள் மறக்காமல் சீட் பெல்ட் அணிய வேண்டும். அதேபோல இருசக்கர வாகனம் ஓட்டுபவர் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.