கடத்தப்பட்ட சிலைகளை இந்தியா கொண்டுவரும் ஆஸி., பிரதமர்!
ஜனவரி மாதம் இந்தியா வரும் ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மாரிசன் , அந்நாட்டு வசமுள்ள 3 சிலைகளை இந்தியாவிடம் ஒப்படைக்கிறார்.
15-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு சிலை, 6 மற்றும் 8-ம் நூற்றாண்டைச் சேர்ந்த 2 சிலைகள் என மொத்தம் 3 சிலைகளை ஆஸ்திரேலியா அருங்காட்சியகம் ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசத்தில் இருந்து வாங்கிச்சென்றது.
பிரபல சிலை கடத்தல்காரர் சுபாஷ் கபூரிடமிருந்து 3 சிலைகளை ஆஸ்திரேலியா அருங்காட்சியம் வாங்கியதாக கூறப்படுகிறது. பின்னர் விசாரணையில் அவை இந்தியாவிலிருந்து கடத்தப்பட்ட சிலைகள் என தெரியவந்தது. இதனை அடுத்து அந்த சிலைகளை இந்தியாவிடமே திருப்பி தருவதற்கு ஆஸ்திரேலியா அரசு முடிவு செய்துள்ளது.
இதன்படி ஜனவரி மாதம் இந்தியா வரும் ஆஸ்திரேலியா பிரதமர் 3 சிலைகளையும் கொண்டு வருகிறார். தமிழகத்திலிருந்து திருடப்பட்ட துவார பாலகர் சிலை உள்பட 3 சிலைகளையும் ஸ்காட் மாரிசன் எடுத்து வருகிறார். இது குறித்து தெரிவித்துள்ள அவர், ''இந்த கலைப்பொருட்கள் அதன் தாயகமான இந்தியாவுக்கு திரும்புவதே சரியாக இருக்கும். இது இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையேயுள்ள ஆழமான உறவின் நிரூபணமாக இருக்கும்'' என தெரிவித்துள்ளார்.