HEADLINES | இந்தியாவுடன் பேச்சுவார்த்தையை மறுத்த ட்ரம்ப் முதல் முன்பதிவில் மிரட்டும் கூலி வரை!
வரிப் பிரச்சினைகள் தீர்க்கப்படும் வரை இந்தியாவுடன் வர்த்தகப் பேச்சுவார்த்தை கிடையாது என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அதிரடி அறிவித்துள்ளார்.
அன்புமணி தலைமையில் இன்று நடைபெறும் பாமக பொதுக்குழுவிற்கு தடையில்லை என, ராமதாஸ் தாக்கல் செய்திருந்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாமக பொதுக்குழு தொடர்பான சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு நீதிக்கும், அறத்திற்கும் கிடைத்த வெற்றி என அன்புமணி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இணை அரசாங்கத்தை நடத்தி வருவதாக சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், ஐஏஎஸ் அதிகாரிகள் அல்ல, ஸ்டாலின்தான் அரசை நடத்துகிறார் என தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.
அதிமுக கூட்டணியில் தேமுதிக தொடர விரும்புகிறோம் என பிரேமலதா உடனான சந்திப்பு குறித்து கே.சி.வீரமணி பதிலளித்துள்ளார்.
வாக்காளர் பட்டியல் தொடர்பாக குறைகூறி அரசியல் செய்வதை ராகுல் காந்தி நிறுத்திக் கொள்ள வேண்டும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.
புவனகிரி பேரூராட்சி அலுவலகத்தில், பணியில் இருந்த இளநிலை உதவியாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், சிசிடிவி காட்சி அடிப்படையில் விசிக கவுன்சிலர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆம்பூரில் அதிமுக பேனர் விழுந்து பள்ளி மாணவன் உட்பட இருவர் காயம். நெடுஞ்சாலை மேம்பாலத்தில் ஒட்டப்பட்டிருந்த பேனர், காற்றில் விழுந்ததால் விபரீதம்.
ஆயுதப்படை காவலர்கள் தாக்கியதில் உயிரிழந்த மடப்புரம் அஜித்குமாரின் குடும்பத்திற்கு நீதிமன்ற உத்தரவுபடி கூடுதலாக 25 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டது.
பேரிடர்களின் பிரதேசமாக உத்தராகண்ட் மாறி வருகிறது. கடந்த 9 ஆண்டுகளில் 18 ஆயிரத்து 464 இயற்கை சீற்றங்களை சந்தித்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் மிக நீளமான சரக்கு ரயில் பயன்பாட்டிற்கு வந்தது. நான்கரை கிலோ மீட்டர் நீளம் கொண்ட ரயிலின் முதல் பயண வீடியோவை மத்திய அமைச்சர் வெளியிட்டுள்ளார்.
திருச்சி, பெரம்பலூர், சேலம், தஞ்சை என தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு. தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் உட்பட 5 மாவட்டங்களில் இன்றும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ரஜினியின் கூலி படத்திற்கான டிக்கெட் முன்பதிவு நேற்று இரவு தொடங்கிய நிலையில், சில நிமிடங்களிலேயே பல திரையரங்குகளில் முதல் நாளுக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன.