HEADLINES|சூடுபிடிக்கும் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் முதல் வெள்ளத்தில் மிதக்கும் மும்பை வரை!
புதிய தலைமுறை இணையதளம் நாள்தோறும் அன்றைய தலைப்புச் செய்திகள் குறித்து இருவரிகளில் பதிவு செய்து வருகிறது. அந்த வகையில், இன்றைய நாளுக்கான செய்திகளில் சூடுபிடிக்கும் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் முதல் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் தத்தளிக்கும் மும்பை மாநகரம் வரை விவரிக்கிறது.
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் இரு தரப்பிலும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அந்த வகையில் பாஜக சார்பில் போட்டியிடும் சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று வேட்புமனு தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நெல்லையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பங்கேற்கும் கூட்டத்துக்கு அனுமதி மறுத்ததாகக் கூறி பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது. பேனர்கள் வைக்க மட்டுமே கட்டுப்பாடு விதித்ததாக காவல் துறை விளக்கமளித்துள்ளது.
பதினாறு குற்றச்சாட்டுகள் தொடர்பாக வரும் 31ஆம் தேதிக்குள் நேரிலோ, கடிதம் வாயிலாகவோ பதில் அளிக்கலாம் என ராமதாஸ் தரப்பு கெடு விதித்துள்ளது.
கோயில் நிதியை கோயில்களுக்காகவே பயன்படுத்த வேண்டும் என உத்தரவிட்ட மதுரை உயர்நீதிமன்றக் கிளை திருமண மண்டபம் கட்டுவதற்கு பிறப்பிக்கப்பட்ட அரசாணைகளை ரத்து செய்தது.
டெல்லியில் பிரதமர் மோடியுடன் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ சந்தித்து ஆலோசனை நடத்தினர். இதில், எல்லைப் பிரச்னை, இருநாட்டு வர்த்தக தொடர்புகள் ஆகியன குறித்து இருவரும் ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
கனமழை, வெள்ளப்பெருக்கால் மும்பை மாநகரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. தவிர, அங்கு மேலும் இரண்டு நாட்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
ஜியோவைத் தொடர்ந்து குறைந்தபட்ச மாதாந்திர செல்போன் கட்டண பேக்கை ஏர்டெல் நிறுவனமும் நிறுத்தியுள்ளது. ஒருநாளுக்கு ஒரு ஜிபி டேட்டா அடங்கிய 249 கட்டண பேக் இனி இருக்காது என அறிவித்துள்ளது.
இந்தியா, பாகிஸ்தான் சண்டையை நிறுத்த வர்த்தக ஒப்பந்தத்தை ட்ரம்ப் சரியான முறையில் பயன்படுத்தினார் என வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் பேச்சால் மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது.
சுவீடன் நாட்டில் 113 ஆண்டுகள் பழமை வாய்ந்த தேவாலயம் நவீன தொழில்நுட்ப உதவியுடன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியில் யாஷஸ்வி ஜெய்ஸ்வால், ஸ்ரேயஷ் ஐயர் நீக்கப்பட்டுள்ளனர்.