“காஷ்மீரி என்ற காரணத்திற்காக என்னை தாக்காதீர்கள்” - இளைஞர் வேதனை
காஷ்மீரி என்ற காரணத்திற்காகவே தன்னை தாக்காதீர்கள் என்று இளைஞர் ஒருவர் வேதனையுடன் கூறியுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில், காஷ்மீரைச் சேர்ந்த ஜிப்ரான் நஸிர் தர் என்ற இளைஞர் இருசக்கார வாகனத்தில் வியாழக்கிழமை இரவு சென்றுள்ளார். அப்போது, சாலையில் இருந்த கும்பல் ஒன்று நஸிர் தர்ரை தாக்கியுள்ளனர். இரவு 8.30 மணியளவில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
இளைஞரும் பத்திரிகையாளருமான நஸிர் தர் இதுகுறித்து கூறுகையில், “என்னுடைய இருசக்கர வாகனத்தில் திலக் சாலையில் சென்று கொண்டிருந்தேன். கிரிஜா ஹோட்டல் அருகே சிகப்பு சிக்கல் காரணமாக வண்டியை நிறுத்தினேன். எனக்குப் பின்னால் வாகனத்திலிருந்த சிலர், முன்னோக்கி நகருமாறு கத்தினர். ஆனால், சிகப்பு சிக்னல் இருப்பதாக நான் கூறினேன். முன்னோக்கி நகரவில்லை. என்னுடைய வண்டியின் எண்ணை பார்த்த அவர்கள், ஹிமாச்சல பிரதேசத்திற்கே அனுப்பிவிடுவோம் என்று கூறினார்கள். அவர்களிடம் நான் காஷ்மீரைச் சேர்ந்தவன் என்று கூறினேன்.
இதனைக் கேட்டதும் ஆத்தரமடைந்த அவர்கள், வண்டியிலிருந்து கீழே இறங்கி வந்தார்கள். என்ன நடக்கப் போகிறது என்பது எனக்குப் புரிந்திருந்தது. அவர்கள் என்னை தாக்கினார்கள். அவர்கள் சில நண்பர்களுக்கு போன் செய்து வரச் சொன்னார்கள். தாக்கிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்கள். வண்டியின் எண்ணை மட்டும் குறித்து வைத்தேன். பின்னர் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தேன்” என்றார்.
மேலும், தன்னுடைய ட்விட்டர் மூலம் புனே போலீஸ் கமிஷனர் வெங்கடேசத்திற்கு, “கும்பல் ஒன்று காஷ்மீரி என்பதற்காகவே என் மீது எவ்வித காரணமும் இல்லாமல் நேற்று தாக்குதல் நடத்தினர். குற்றவாளிகளுக்கு எதிரான என்னுடைய புகாரை வாபஸ் பெற்றுவிட்டேன். புனே செல்லும் சாலையில் கும்பல் தாக்குதல் நடைபெறுவதை சுட்டிக் காட்டுகிறேன்” என்று தகவல் தெரிவித்திருந்தார்.
ஆனால், இந்தச் சம்பவம் சாலையோர தகராறுதான் என்றும் காஷ்மீரிகள் தொடர்பான பிரச்னை அல்ல என்றும் போலீசார் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட நஸிர் புகார் அளிக்காத நிலையில், போலீசாரே தாமாக வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
புல்வாமா தாக்குதல் சம்பவத்திற்கு பிறகு பல்வேறு இடங்களில் காஷ்மீர் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. பிரதமர் மோடியும் காஷ்மீரிகள் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.