வாஜ்பாய் உடலுக்கு தீ மூட்டினார் வளர்ப்பு மகள் நமிதா

வாஜ்பாய் உடலுக்கு தீ மூட்டினார் வளர்ப்பு மகள் நமிதா
வாஜ்பாய் உடலுக்கு தீ மூட்டினார் வளர்ப்பு மகள் நமிதா

முதுபெரும் அரசியல் தலைவரும், சுதந்திரப் போராட்டத் தியாகியும், முன்னாள் பிரதமருமான அடல் பிகாரி வாஜ்பாய்  உடல்நலக் குறைவால் நேற்று மாலை 5 மணி அளவில் காலமானார். அவருக்கு வயது 93. உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஜூன் மாதம் 11 ஆம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

வாஜ்பாய் காலமானதையடுத்து, அவரது உடல் கிருஷ்ண மேனன் சாலையில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு அரசியல் கட்சி பிரமுகர்கள் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். இதைத் தொடர்ந்து இன்று காலை 9.30 மணிக்கு வாஜ்பாய் உடல் டெல்லியில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

பாஜக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த வாஜ்பாய் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி, பாரதிய ஜனதா தேசியத் தலைவர் அமித் ஷா, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்பட நாட்டின் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

இதைத்தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் அவரது உடல் ஏற்றிச் செல்லப்பட்டு, பொதுமக்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் அஞ்சலிக்காக பாரதிய ஜனதா தலைமையகத்தில் வைக்கப்பட்டது. அங்கு நூற்றுக்கணக்கான மக்கள் வரிசையில் காத்திருந்து தொடர்ந்து அஞ்சலி செலுத்தினர். பொதுமக்களின் அஞ்சலிக்குப் பின் பாஜக தலைமை அலுவலகத்தில் இருந்து இன்று மதியம் 1.30 மணிக்கு மேல் வாஜ்பாய்  இறுதி ஊர்வலம் தொடங்கியது. 

ராணுவ வாகனத்தில் ஏற்றப்பட்ட வாஜ்பாய் உடல் ஸ்மிருதி ஸ்தல் என்ற இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இறுதி ஊர்வலம் தொடங்கிய பாரதிய ஜனதா தலைமையகத்தில் இருந்து தகனம் செய்ய கொண்டு செல்லப்பட்ட ஸ்மிருதி ஸ்தல் வரை சுமார் 4 கிலோமீட்டர் தூரம் பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித்ஷா ஆகியோர் நடந்தே சென்றனர். இதில் இதில் ஏராளமான பாஜக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துக் கொண்டனர். இறுதி ஊர்வலம் ஸ்மிருதி ஸ்தலில் அடைந்த பிறகு அங்கு ராணுவ இசை, வேத மந்திரங்கள் முழங்க தரைப்படை, விமானப்படை, கடற்படை என முப்படை வீரர்கள் இறுதி மரியாதை செலுத்தினார். 

ஸ்மிருதி ஸ்தலில் நடைபெற்ற இறுதி நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசு தலைவர் வெங்கய்யா நாயுடு, பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித்ஷா, பாஜக மூத்த தலைவர் அத்வானி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மக்களவை சபாநாயகர், பீகார் முதல்வர் நிதிஷ்குமார், பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் உட்பட ஏராளமானோர் கலந்துக் கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர். பூடான் மன்னர் ஜிக்மே மற்றும் வங்கதேசம், நேபாள அமைச்சர்களும் வாஜ்பாயி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். 

அரசியல் தலைவர்கள் இறுதி அஞ்சலி செலுத்திய பின்னர் அவரது உடல் எரியூட்டப்படும் இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அவரது உடல் மீது போர்த்தப்பட்ட தேசியக் கொடி பேத்தி நிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர், வாஜ்பாய் உடலுக்கு உறவினர்கள் இறுதி சடங்குகள் செய்தனர். இதனையடுத்து தகன மேடைக்கு கொண்டுவரப்பட்டு தீ மூட்டப்பட்டது. வாஜ்பாய் உடலுக்கு அவரது வளர்ப்பு மகள் நமிதா எரியூட்டினார். பின்னர் தேம்பித்தேம்பி அழுதார். முன்னதாக, 21 குண்டுகள் முழங்க வாஜ்பாய் உடலுக்கு ராணுவ மரியாதை செலுத்தப்பட்டது. வழக்கமாக இந்து சடங்குகளின் ஆண் வாரிசுதான் இறந்தவர்களின் உடலுக்கு தீ மூட்டுவார்கள். ஆனால், வாஜ்பாய்க்கு அவரது வளர்ப்பு மகள் தீ மூட்டியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com