
காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பிய பிறகு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்
ஜம்மு- காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுள்ளது. மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா இதற்கான அறிவிப்பை வெளியிட்டார். அத்துடன் இரண்டு யூனியன் பிரதேசங்களாக ஜம்மு- காஷ்மீர் பிரிக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவைக் கொண்ட யூனியன் பிரதேசமாக ஜம்மு- காஷ்மீரும், சட்டப்பேரவையற்ற யூனியன் பிரதேசமாக லடாக்கும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு சில கட்சிகள் ஆதரவும், சில கட்சிகள் எதிர்ப்பும் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் இது குறித்து பேசிய அமித்ஷா, சட்டப்பிரிவு 370 இருந்தால் தான் மாநிலத்தின் தனிஉரிமையை பாதுகாக்க முடியும் என்பதை எப்படி ஏற்க முடியும்? தமிழகம், கேரளா போன்ற மாநிலங்கள் சட்டப்பிரிவு 370 இல்லாமலேயே மொழி, கலாசாரத்தை பாதுகாத்து வருகின்றன. காஷ்மீருக்கு யூனியன் பிரதேச அந்தஸ்து என்பது தற்காலிகமானது தான். காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பிய பிறகு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.