கங்கையில் நீராடிய 6 பேர் உயிரிழப்பு... கூட்ட நெரிசலில் சிக்கி பலி..?
மகர சங்கராந்தியை ஒட்டி மேற்கு வங்க மாநிலத்தில் கங்கை நதியில் நீராட சென்ற 6 பக்தர்கள் உயிரிழந்தனர். இவர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்ததாக முதலில் சொன்ன மேற்கு வங்க அரசு, பின்னர் அவர்கள் உடல் நலக் குறைவால் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளது.
கங்கையில் நேற்று மாலை சுமார் 6 மணி அளவில் கொல்கத்தா திரும்பும் படகுகளில் ஏறுவதற்காக ஏராளமான பயணிகள் முண்டியடித்துக்கொண்டு சென்றனர். இதில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக ஆறு பேர் உயிரிழந்ததாக முதலில் தெரிவிக்கப்பட்டது. பின்னர் இதை மறுத்த மாநில அமைச்சர் மண்துராம் பகிரா, ஆறு மூதாட்டிகள் உடல் நலக்குறைவால் உயிரிழந்ததாக கூறினார். படகில் ஏறவேண்டும் என்ற அவசரத்தில் சென்றதால் அவர்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில் இந்த ஆறு பேரும் நெரிசலால் உயிரிழந்ததாக கருதி பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்ததுடன், உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா இரண்டு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.