ராஜஸ்தானில் தூக்கில் தொங்கிய சடலம்: பத்மாவதி எதிர்ப்பாளர்கள் செய்த கொலையா?
பத்மாவதி' பட விவகாரத்தில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே தூக்கிலிட்ட நிலையில் ஒருவர் சடலம் கைப்பற்றப்பட்டுள்ளது. அந்த இடத்தில் பத்மாவதி படத்திற்கு எதிராக வசனம் எழுதப்பட்டிருந்ததோடு கொலையும் செய்வோம் எனவும் எழுதப்பட்டிருந்தது. எனவே பத்மாவதி பட எதிர்ப்பாளர்கள் அந்த நபரைக் கொலை செய்திருப்பார்களா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ராஜஸ்தான் தலைநகர் ஜெய்பூர் அருகே நாகர்கர் கோட்டையில் 40 வயது மதிக்கத்தக்க ஒருவரின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதாக செய்திகள் பரவியது. தகவல் அறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து, உடலை கைப்பற்றினர்.
அருகே உள்ள பாறைகளில் பத்மாவதி படத்திற்கு எதிராக வசனங்கள் எழுதப்பட்டிருந்தன. மேலும் ‘நாங்கள் உருவ பொம்மையெல்லாம் எரிக்க மாட்டோம், கொலை செய்துவிடுவோம்’ என்று இந்தியில் வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன. இந்த சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூக்கிலிட்ட நிலையில் இருந்தவர் உள்ளூர் பகுதியைச் சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் சேட்டன் சாய்னி என்பது தெரியவந்துள்ளதாக கூறிய போலீசார் இது தற்கொலையா அல்லது கொலையா என்பது குறித்து தெரியவில்லை என்று கூறினர். மேலும், தன்னுடைய சகோதரர் தற்கொலை செய்து கொண்டிருக்க மாட்டார். இது கொலையாக இருக்கும் என சாய்னியின் சகோதரர் ராம் ரத்தன் தெரிவித்தார். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பத்மாவதி’ இந்தி திரைப்படம் வரும் டிசம்பர் 1 ஆம் தேதி திரைக்கு வருவதாக இருந்தது. இதில் ராஜஸ்தானின் சித்தூரை ஆண்ட ரஜபுத்திர வம்ச ராணி பத்மினி வேடத்தில் நடிகை தீபிகா படுகோனே நடித்துள்ளார். படத்தில் ராணி பத்மினியின் வரலாறு தவறாக சித்தரிக்கப்பட்டிருப்பதாக கூறி கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது.
ராஜஸ்தான், குஜராத், உத்தரப் பிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் படத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனையடுத்து, பத்மாவதி திரைப்படத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் உள்ள நிலையில், திரைப்பட ரிலீஸ் ஒத்திவைக்கப்படுவதாக இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி அறிவித்தார்.