ஆஸ்ட்ராஜெனிகா தடுப்பூசியால் ரத்தம் உறைதல் பிரச்னை? - நிபுணர்களின் விளக்கம்

ஆஸ்ட்ராஜெனிகா தடுப்பூசியால் ரத்தம் உறைதல் பிரச்னை? - நிபுணர்களின் விளக்கம்
ஆஸ்ட்ராஜெனிகா தடுப்பூசியால் ரத்தம் உறைதல் பிரச்னை? - நிபுணர்களின் விளக்கம்

ஆஸ்ட்ராஜெனிகா நிறுவனத்தின் தடுப்பூசியை செலுத்திக் கொள்பவர்களுக்கு ரத்த உறைதல் ஏற்படுவதாக புகார் எழுந்த நிலையில், அதனைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஆய்வு முடிவு அடிப்படையில் சில நாடுகள் தடையை நீக்கியுள்ள பின்னணியில், இந்தியாவில் தடுப்பூசி நிலவரம் குறித்து பார்க்கலாம்.

மக்களை ஓராண்டுக்கு மேலாக அச்சுறுத்தும் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த பெரும்பாலான நாடுகளில் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. ஆனால், ஆஸ்ட்ராஜெனிகா தடுப்பூசியால் ரத்தம் உறைதல் பிரச்னை ஏற்படுவதாக புகார் எழுந்திருக்கிறது. இதன்காரணமாக இந்த தடுப்பூசிக்கு நார்வே, டென்மார்க், ஸ்பெயின், பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் தற்காலிக தடை விதித்துள்ளன. பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், ஆஸ்ட்ராஜெனிகா நிறுவனமும் இணைந்து இந்தத் தடுப்பூசியை உருவாக்கின.

டென்மார்க், நார்வே, நெதர்லாந்து, ஆஸ்திரியா நாடுகளில் 30 லட்சம் பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இதில் 22 பேருக்கு ரத்தம் உறைதல் ஏற்பட்டுள்ளதாகவும், ஒருவர் உயிரிழந்திருப்பதாகவும் புகார் உள்ளது. ஜரோப்பா நாடுகளில் 50 லட்சம் தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்ட நிலையில், 30 பேருக்கு ரத்தம் உறைதல் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக ஆஸ்ட்ராஜெனிகா தடுப்பூசிக்கு நார்வே, டென்மார்க், ஸ்பெயின், பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் தற்காலிக தடை விதித்தன.

பின்னர், இதுகுறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாகவும், இந்த தடுப்பூசியால் ரத்த உறைவு ஏற்படுவதற்கான எந்த ஆதாரங்களும் இல்லையெனவும் உலக சுகாதார அமைப்பும், ஐரோப்பிய மருந்து ஒருங்குமுறை ஆணையமும் அறிவித்துள்ளது. மேலும், தடுப்பு மருந்து பாதுகாப்பானது எனவும் கூறியதையடுத்து ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளில் இந்த தடுப்பூசிக்கு தடை நீக்கப்பட்டு, மக்களுக்கு செலுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதே தடுப்பு மருந்து இந்தியாவில் கோவிஷீல்டு என்ற பெயரில் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 2.5 கோடி டோஸ்கள் செலுத்தப்பட்டிருக்கும் நிலையில், மக்களுக்கு அதிகளவில் பக்க விளைவுகள் ஏற்படவில்லை. எனினும், ஒருசில இடங்களில் குறைவான நபர்களுக்கு தலைவலி, காய்ச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. தற்போது தற்காலிக தடைவிதிக்கப்படட்டிருக்கும் ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில் ஆய்வுகள் முடிந்து விரைவில் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் எனவும் மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com