'யார் தியாகிகள்?' - சர்ச்சை கருத்தால் தேசத்துரோக வழக்கில் அசாம் எழுத்தாளர் கைது!

'யார் தியாகிகள்?' - சர்ச்சை கருத்தால் தேசத்துரோக வழக்கில் அசாம் எழுத்தாளர் கைது!
'யார் தியாகிகள்?' - சர்ச்சை கருத்தால் தேசத்துரோக வழக்கில் அசாம் எழுத்தாளர் கைது!

சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் தாக்குதலில் உயிரிழந்த பாதுகாப்பு படையினர் தொடர்பாக சர்ச்சை கருத்துகளைத் தெரிவித்த அசாம் எழுத்தாளரை தேசத்துரோக வழக்கில் அதிரடியாக கைது செய்துள்ளனர் போலீசார்.

சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டதை அடுத்து, பாதுகாப்புப் படையினர் குறித்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டதற்காக அசாமின் 48 வயது எழுத்தாளர் சீகா சர்மா மீது தேசத் துரோகம் மற்றும் பிற குற்றச்சாட்டுகளுக்காக கைது செய்யப்பட்டுள்ளார். குற்றம்சாட்டப்பட்ட எழுத்தாளர், குவஹாத்தியைச் சேர்ந்தவராவார்.

இவர், ``சம்பளம் வாங்கும் ஊழியர்கள் பணியின்போது இறந்தால் அவர்களை தியாகிகள் என்று சொல்ல முடியாது. அப்படிச் சொன்னால் அதே தர்க்கத்தின்படி, மின்சாரம் காரணமாக இறக்கும் மின்சாரத் துறை ஊழியர்களையும் தியாகிகள் என்று முத்திரை குத்த வேண்டும். இந்த விவகாரத்தில் மக்களை ஊடகங்கள் உணர்ச்சிவசப்பட வைக்கவேண்டாம்" என்று சீகா தனது ஃபேஸ்புக் பதிவில் கூறியிருந்தார். இவரின் இந்தப் பதிவு இணையத்தில் பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

குவஹாத்தி உயர் நீதிமன்றத்தின் இரண்டு வழக்கறிஞர்கள் உமி தேகா பருவா மற்றும் கங்கனா கோஸ்வாமி என்பவர்கள், ``இது எங்கள் வீரர்களின் கவுரவத்திற்கு முற்றிலும் அவமரியாதைக்குரியது. மேலும், இதுபோன்ற கேவலமான கருத்துகள் நமது ஜவான்களின் ஈடு இணையற்ற தியாகத்தை வெறும் 'பணம் சம்பாதிக்கும் சொற்பொழிவாக' குறைப்பது மட்டுமல்லாமல், தேசத்தின் சேவையின் ஆன்மா, புனிதத்தன்மை மீதான வாய்மொழி தாக்குதலாகும். எனவே, சீகா சர்மா கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று போலீஸில் புகார் கொடுத்தனர்.

``இந்தப் புகாரின் அடிப்படையில் ஐபிசி 124 ஏ (தேசத்துரோகம்) உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு சீகா கைது செய்யப்பட்டார்" என்று குவஹாத்தி போலீஸ் கமிஷனர் முன்னா பிரசாத் குப்தா தெரிவித்துள்ளார். மேலும், சீகா சர்மா நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சீகா சர்மா, எழுத்தளார் மட்டுமல்ல; திப்ருகார் அகில இந்திய வானொலியில் பணிபுரிவதாகவும் கூறப்படுகிறது.

இதேபோன்று கடந்த ஆண்டு அரசுக்கு எதிராக கருத்து பதிவிட்டதற்காக சீகா சர்ச்சையில் சிக்கினார். அதற்கு அவர் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் போலீஸ் நடவடிக்கை குறித்து மீண்டும் ஒரு பதிவிட்டுள்ள சீகா சர்மா, ``எனது பதிவு மன துன்புறுத்தலை தவறாக சித்தரிக்கவில்லையா? நான் முன்பு பெற்ற கொலை மிரட்டல் அச்சுறுத்தல்கள் குறித்து நான் தாக்கல் செய்த எஃப்.ஐ.ஆரை ஏன் மறுபரிசீலனை செய்யவில்லை?" என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com