வாத்தை கொன்றவரை தூக்கில் போடணும்: போலீசில் பெண் பிடிவாதம்!
முட்டையிடும் வாத்தைக் கொன்ற எதிர்வீட்டுக்காரரைத் தூக்கில் போட வேண்டும் என்று பெண் ஒருவர் போலீசில் புகார் செய்துள்ளார்.
அசாம் மாநிலம் கவுகாத்தி அருகே உள்ள கஞ்சன் நகரைச் சேர்ந்தவர் ரேணு ரபா. இவர் வாத்துகள் வளர்த்து வருகிறார். இந்த வாத்துகளில் சில யாரையும் கேட்காமல் பக்கத்து வீட்டுக்குச் சென்றுவிடுவது வழக்கம். ‘உங்க வாத்து, எங்க வீட்டுல வந்து குப்பையாக்கிடுது’ என்று பக்கத்து வீட்டில் வசிக்கும் குசும்பர் பருவா, ரேணுவிடம் புகார் சொல்வார். இது வழக்கமாக நடந்துகொண்டிருக்கும் பஞ்சாயத்து.
ஒரு நாள், ’இன்னொரு வாட்டி உங்க வாத்து வீட்டுக்குள்ள வந்தது... வெட்டி குழம்பு வச்சிருவேன்’ என்று பேச்சுவாக்கில் சொன்னார் பருவா. ‘செஞ்சு பாரு’ என்று சவால் விட்டாராம் ரேணு. சொன்ன மாதிரி நேற்று முன் தினம் தன் வீட்டுக்குள் வந்த வாத்தை, அடித்தே கொன்றுவிட்டார் குசும்பர் பருவா. கொதித்துப் போன ரேணு கத்திக் கூப்பாடு போட்டார். பிறகு கவுகாத்தி போலீசில் புகார் செய்தார்.
புகாரில், ‘என் வாத்தை துடிக்கத் துடிக்கக் கொன்ற பருவாவை தூக்கில் போட வேண்டும். அது இரண்டு நாட்களுக்கு முன் தான் முட்டையிட ஆரம்பித்தது. அதற்கு இப்படி பண்ணிவிட்டார்’ என்று கூறியிருக்கிறார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.