கொட்டும் மழையில் விடாமல் பணியாற்றிய காவலர் ! குவியும் பாராட்டு
பேய் மழையில் நனைந்து கொண்டு போக்குவரத்தை சீரமைத்த போக்குவரத்து காவலரை அசாம் மக்கள் இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்.
செய்யும் வேலையை மனதார விரும்பி முழு ஈடுபாட்டுடன் செய்ய வேண்டும் என்று சொல்வார்கள். அதற்கு எடுத்துக்காட்டாய் நேற்று இணையம் முழுவதும் பரவி இருக்கிறார் போக்குவரத்து காவலர் மிதுன் தாஸ்.
அசாமில் உள்ள கவுகாத்தியின் பசிஸ்தா பகுதி வாகன நெரிசல் அதிகமுள்ள பகுதி. இந்நிலையில் அசாமில் பேய் காற்றுடன் அடைமழை பெய்து வருகிறது. வீட்டிற்குள் இருப்பவர்களை கூட அச்சமூட்டும் மழை பெய்து கொண்டிருக்கும் போது போக்குவரத்து காவலர் மிதுன் தாஸ் சாலையின் நடுவே நின்று போக்குவரத்தை சீர்செய்து வந்துள்ளார். மேற்கூரை இல்லாமல், மழை கோட் இல்லாமல் காவலர் உடையுடன் நின்று மழையில் நனைந்தவாறே போக்குவரத்தை சீர்செய்யும் அவரை காரில் சென்ற யாரோ வீடியோ எடுக்க அது தற்போது வைரல் ஆகியுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த காவலர் மிதுன் தாஸ், எனது பணி நேரம் காலை 7 மணி முதல் மதியம் 12 வரை. சரியாக மதியத்துக்கு முன்னதாக அடைமழை தொடங்கியது. அதனால் அடுத்த பணிக்கு வரும் காவலர் வரவில்லை. அதனால் நானே பணியை தொடர்ந்தேன். காற்றும், மழையும் கடுமையாக இருந்ததால் சற்று அச்சமாக இருந்தது. ஆனால் வேலை தான் முக்கியம் என்று சமாளித்தேன் என்று தெரிவித்துள்ளார்.
மிதுன் தாஸின் பணி ஈடுபாட்டை புகழ்ந்து பேசியுள்ள கவுகாத்தி காவல் ஆணையர் தீபக் குமார், மழை நேரத்தில் பரபரப்பான சாலைகள் வாகன நெரிசலில் சிக்கி விடும். அடைமழையைக் கூட பொருட்படுத்தாமல் போக்குவரத்தை சீர்செய்த மிதுன் தாஸ் பாராட்டுக்குரியவர். அவரை பெருமைப்படுத்தி அவருக்கு விருது வழங்கி சிறக்க உள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.