\
Assam singer zubeen garg death case seven accused charged
ஜூபீன் கார்க்insta

அசாம் பாடகர் மர்ம மரண வழக்கு.. 7 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு.. ஜூன் 8-இல் தொடங்கும் விசாரணை!

முன்னதாக, இவ்வழக்கு தொடர்பாக தனி விசாரணை நடத்திய சிங்கப்பூர் காவல் படை, இதில் எந்தவிதமான குற்றச் செயலுக்கும் ஆதாரம் இல்லை என முடிவு செய்தது.
Published on

அசாம் பாடகர் ஜூபீன் கார்க் மர்ம மரணம் வழக்கில், இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், அவர்கள் மீது சிறப்பு நீதிமன்றம் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்துள்ளது. இதுதொடர்பான விசாரணை ஜூன் 8இல் தொடங்குகிறது.

அஸாமி மட்டுமின்றி, வங்கம், இந்தி மொழி ரசிகர்களாலும் கொண்டாடப்பட்டவர் ஜூபீன் கார்க். வடகிழக்கு மாநிலங்களிலேயே மிக அதிகம் சம்பளம் வாங்கும் இசைக்கலைஞராக அறியப்பட்ட ஜூபீன் கார்க், நேரடி இசை நிகழ்ச்சிகளை உலகம் முழுவதும் நடத்திவந்தார். இந்த நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 19ஆம் தேதி சிங்கப்பூரில் இசை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக, அவர் அங்குச் சென்றிருந்தபோது, நீச்சல் குள விபத்தில் உயிரிழந்தார். சிங்கப்பூரிலே அவரது உடல் உடற்கூராய்வு செய்யப்பட்டு இந்தியாவிற்கு வந்தது. ஆனால் அவரது மரணத்தில் வெளிப்படைத் தன்மை இல்லை என மக்கள் தெரிவித்ததைத் தொடர்ந்து இந்தியாவிலும் இரண்டாவது முறை உடற்கூராய்வு மேற்கொள்ளப்பட்டு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. அவரது திடீர் மரணம் ரசிர்களுக்கும், அசாம் மாநிலத்திற்கும் சோகத்தை ஏற்படுத்தியது.

Assam singer zubeen garg death case seven accused charged
ஜூபீன் கார்க்PTI

இதையடுத்து, அவருடைய மரணத்தில் மர்மம் நீடிப்பதால், மாநில அரசு ஐபிஎஸ் அதிகாரி எம்.பி.குப்தா தலைமையில் 10 பேர் கொண்ட சிறப்பு விசாரணை குழுவை அமைத்துள்ளது. இதையடுத்து அவர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இந்த வழக்கு தொடர்பாக, NEIF தலைமை அமைப்பாளர் ஷியாம்கானு மஹந்தா, பாடகரின் மேலாளர் சித்தார்த் சர்மா, கர்க்கின் இரண்டு இசைக்குழு உறுப்பினர்களான சேகர் ஜோதி கோஸ்வாமி மற்றும் அம்ரித் பிரபா மஹந்தா, உறவினர் மற்றும் அசாம் காவல்துறை டிஎஸ்பி சந்தீபன் கார்க் மற்றும் அவரது PSOக்கள் நந்தீஸ்வர் போரா மற்றும் பிரபின் பைஷ்யா ஆகியோர் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் உள்ளனர். இதில் ஷ்யாம்கனு மஹந்தா மீது பிஎன்எஸ் சட்டத்தின்படி எட்டு பிரிவுகளின்கீழ் குற்றம்சாட்டப்பட்டுள்ளதாகவும், ஷர்மா மீது ஏழு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூபீன் கார்க்
ஜூபீன் கார்க்insta

இந்த நிலையில், அவர்கள் மீது சிறப்பு நீதிமன்றம் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்துள்ளது. இதன் விசாரணை, அடுத்த ஜூன் 8ஆம் தேதி முதல் தொடங்கப்பட இருக்கிறது. முன்னதாக, இவ்வழக்கு தொடர்பாக தனி விசாரணை நடத்திய சிங்கப்பூர் காவல் படை, இதில் எந்தவிதமான குற்றச் செயலுக்கும் ஆதாரம் இல்லை என முடிவு செய்தது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com