தேசிய குடிமக்கள் பதிவேடு வெளியீடு: 19 லட்சம் பேரின் பெயர்கள் இல்லை..!
அசாம் மாநில மக்களின் குடியுரிமையை உறுதி செய்யும் தேசிய குடிமக்கள் பதிவேடு வெளியிடப்பட்டுள்ளது.
அண்டை நாடுகளில் இருந்து குடியேறியவர்களை அடையாளம் காணும் வகையில் அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேடு வெளியிடப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி வெளியிடப்பட்டுள்ள இறுதிப்பட்டியலில் 19 லட்சத்து 6657 பேரின் பெயர்கள் இடம்பெறவில்லை.
2018-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட பட்டியலில் சுமார் 40 லட்சம் பேரின் பெயர்கள் விடுபட்ட நிலையில் தற்போது வெளியாகி உள்ள புதிய பட்டியலில் 19 லட்சம் பேரின் பெயர்கள் இடம் பெறவில்லை. முறையான ஆவணங்கள் சமர்ப்பிக்காததால், 19 லட்சம் பேரின் பெயர்கள் பட்டியலில் இடம்பெறவில்லை என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 3.11 கோடி பேர் அசாம் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் இடம்பெற்றுள்ளனர்.
பலரின் பெயர் விடுபட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அசாமில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனிடையே இறுதிப்பட்டியலில் இடம்பெறாதோர் இந்திய குடியுரிமையை நிரூபிக்க வெளிநாட்டு தீர்ப்பாயத்தில் முறையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.