#ByElectionResults | காங்கிரஸின் கோட்டையைக் காலி செய்யும் பாஜக.. அசாமில் முன்னிலை!
2019 மற்றும் 2024 மக்களவைத் தேர்தல்களில் அசாம் நாகோன் நாடாளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்ற எம்.பி பிரத்யுத் போர்டோலோய், காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைந்து 2026 அஸ்ஸாம் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதால் இத்தொகுதி காலியானது. இதையடுத்து இங்கும் கடந்த 6ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் 15 பேர் போட்டியிட்டனர். எனினும் மும்முனைப் போட்டியே நிலவியது. 76.16% வாக்குப் பதிவான நிலையில், இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
அதன்படி, தற்போதுவரை பாஜகவே முன்னிலையில் உள்ளது. முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியான தேவசிஷ் சர்மா முன்னிலையில் உள்ளார். காங்கிரஸ் வேட்பாளரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான சிபமணி போராவும், அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி (AIUDF) கட்சித் தலைவரும் வேட்பாளருமான பத்ருதீன் அஜ்மலும் பின்தங்கி உள்ளனர். ஆரம்பகட்ட சுற்றுகளின் முடிவில் பாஜக வேட்பாளர் தேவசிஷ் சர்மா 44,000க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வலுவான முன்னிலை வகித்து வருகிறார். இரண்டாவது இடத்தில் பத்ருதீன் அஜ்மல் உள்ளார். ஆனால், காங்கிரஸ் மூன்றாவது இடத்தில் உள்ளது.

