வெள்ளத்தில் சூழந்த மக்கள் - 'காப்பானாக' மாறிய அசாம் அமைச்சர்! குவியும் பாராட்டு
வெள்ளத்தில் சிக்கிய மக்களை படகு ஓட்டுநராக மாறி மீட்டு வரும் அசாம் அமைச்சருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
அசாமில் கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக கனமழை பெய்து வருவதால் அங்கு வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. பிரம்மபுத்திரா மற்றும் அதன் கிளை ஆறுகளில் பயங்கர வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அசாமில் உள்ள 35 மாவட்டங்களில் 32 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் வெள்ளத்துக்கு பலியாகி உள்ளனர். சுமார் 45 லட்சம் பேர் வெள்ளத்தில் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணியில் பேரிடர் மீட்புப் படையினரும், தீயணைப்புப் படையினரும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கச்சார் மாவட்டத்தில் உள்ள சில்ச்சார் பகுதியில் ஏற்பட்ட வெள்ளச் சேதங்களை மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் பரிமால் சுக்லாபைதியா நேற்று பார்வையிட்டார். அப்போது அங்குள்ள சில வீடுகளில் 5-க்கும் மேற்பட்டோர் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தனர். வெள்ளம் சூழ்ந்திருப்பதால் அவர்களால் மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் வீடுகளில் முடங்கியிருந்தனர். இதனை கேள்விப்பட்ட அமைச்சர் சுக்லாபைதியா, உடனடியாக அங்கிருந்த அதிகாரிகளிடம் படகை எடுத்து வர சொன்னார். படகு வந்ததும் யாருடைய உதவியையும் கேட்காமல், காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை அழைத்து வந்து படகில் அமர வைத்து தானே படகை ஓட்டி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அமைச்சராக இருந்த போதிலும், தனது அதிகாரம் அனைத்தையும் தூக்கியெறிந்துவிட்டு மக்களுக்காக படகு ஓட்டிய சுக்லாபைதியாவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.