பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் சேர்த்தால்.... அஸ்ஸாம் அரசு புதிய சட்டம்!
அரசு ஊழியர்கள் தங்கள் பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் சேர்த்தால் ஊதியத்தில் 10 சதவிகிதம் பிடிக்கப்படும் என்று அஸ்ஸாம் அரசு புதிய சட்டத்தை நிறைவேற்றியுள்ளது.
இதுதொடர்பாக ஆங்கிலப் பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில், அஸ்ஸாம் சட்டப்பேரவையில் புதிதாக சட்டம் ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த சட்டமானது வயது முதிர்ந்த பெற்றோர்களை, வருமானம் அதிகம் பெற்றும் சிலர் முதியோர் இல்லத்தில் சேர்ப்பதை தடுக்கும் நோக்கத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை முதற்கட்டமாக அரசு ஊழியர்களிடமிருந்து அம்மாநில அரசு தொடங்கியுள்ளது. இதைத்தொடர்ந்து எம்.பி., எம்.எல்.ஏக்கள் மற்றும் பொதுத்துறை அதிகாரிகளுக்கும் இதேபோன்று சட்டத்தை பிறப்பிக்கவும் அஸ்ஸாம் அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த சட்டத்தின் படி அரசு ஊழியர்கள் தங்களின் பெற்றோர்களையும், மாற்றுத்திறனாளி சகோதர, சகோதரிகளையும் உடன் வைத்து பார்த்துக்கொள்ளாமல் முதியோர் இல்லம் அல்லது ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்த்து விட்டால் அவர்களது ஊதியத்தில் இருந்து 10 சதவிகிதம் பிடிக்கப்பட்டு, அந்தப் பணம் அவர்களின் பெற்றோர்கள் மற்றும் சகோதரர்களுக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விளக்கமளித்துள்ள அஸ்ஸாம் அரசு, இந்த திட்டம் பெற்றோர்களையும், மாற்றுத்திறனாளிகளையும் பாதுகாப்பதற்குதான் என்றும், யாரையும் தனிப்பட்ட வகையில் பாதிப்பதற்கு இல்லை என்றும் தெரிவித்துள்ளது.

