வெள்ளத்தில் மிதக்கும் அசாம் - 4 லட்சம் மக்கள் தவிப்பு
கனமழை மற்றும் வெள்ளத்தால் அசாம் மாநிலம் மிகப்பெரிய அளவில் சேதமடைந்துள்ளது. சுமார் 4 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அசாம், திரிபுரா, மணிப்பூர், மிஸோசரம் ஆகிய வடகிழக்கு மாநிலங்களில் தென்மேற்கு பருவமழையின் தாக்கம் கடந்த சில நாட்களாக தீவிரமாக இருந்தது. இதில் அசாம் மாநிலத்தில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால், மாநிலத்தின் 7 மாவட்டங்களில் வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டது.
ஹோஜய், கர்பி, கோலகாட், கரிம்கஞ்ச், ஹைலகண்டி மற்றும் சசர் மாவட்டங்களில் 3.87 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 668 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. 1,912 ஹெக்டேர் விவசாய நிலங்கள் சேதமடைந்துள்ளன. குவாஹத்தி நகரின் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
மழை மற்றும் வெள்ளப்பாதிப்புகளுக்காக 178 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு அதில் 68 ஆயிரம் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.