தாண்டவமாடும் அசாம் வெள்ளம்: நீரில் தத்தளிக்கும் 26 மாவட்டங்கள்; 80 பேர் உயிரிழப்பு!
அசாமில் கடந்த ஒரு வார காலமாக கோரதாண்டவம் ஆடும் வெள்ள பாதிப்புகளால் இதுவரை 80 பேர் உயிரிழந்துள்ளனர், 26 மாவட்டங்களில் சுமார் 28 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அசாம் மாநிலத்தில் கடந்த வாரத்திற்கும் பெய்துவரும் கனமழை காரணமாக பிரம்மபுத்திரா உள்ளிட்ட 13 ஆறுகள் மற்றும் அதன் துணை ஆறுகளில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளம் காரணமாக தற்போது 26 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த மாவட்டங்களிலுள்ள சுமார் 3 ஆயிரம் கிராமங்கள் பெரும் பாதிப்பில் சிக்கியுள்ளன. வெள்ளத்தால் வீடுகள், சாலைகள், விளைநிலங்கள் மோசமாக சிதைந்துள்ளதுடன் சுமார் 47 ஆயிரம் பேர் வீடிழந்து தவிக்கின்றனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் 649 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அரசின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அசாம் பெருவெள்ளம் காரணமாக 1.16 இலட்சம் ஏக்கர் விவசாய பயிர்கள் அழிந்துபோயுள்ளதாகவும், 27 லட்சம் விலங்குகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. அசாமிலுள்ள காஸிரங்கா உயிரியல் பூங்காவில் வெள்ளப்பெருக்கு காரணமாக இதுவரை 90 விலங்குகள் உயிரிழந்துள்ளன.