குடும்பத்தைக் காப்பாற்ற காய்கறி விற்ற ஏழைப் பெண் - இருசக்கர வாகனம் பரிசளித்த காவல்துறை
இளம் பெண் ஒருவர் இருசக்கர வாகனத்தில் பெரிய பைகளுடன் கூடையில் காய்கறிகளை வைத்து கொண்டு நிற்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக மாறியுள்ளது.
அஸ்ஸாம் மாநிலம் திப்ருகர்ஹ் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜான்மோனி கோகோயி என்ற இளம் பெண். இவருக்கு 20 வயதாகிறது. 12 ஆம் வகுப்பு வரை படித்த பிறகு, ஜான்மோனி சந்தையில் காய்கறிகளை விற்று வரும் அவரது தாய்க்கு உதவி வருகிறார். இவர் அவரது பெற்றோரின் ஒரே குழந்தை. ஊரடங்குப் போடப்பட்டதால் சந்தையை மூடவேண்டிய நிலை ஏற்பட்டது. ஆகவே அவரது குடும்பம் வருமானமின்றி தவிக்கத் தொடங்கினர்.
ஆகவே அவர் தனது பெற்றோரை ஆதரிப்பதற்காக மிதிவண்டியில் காய்கறிகளை வைத்து வீடு வீடாக சென்று விற்பனை செய்து வந்தார். அவரது வறுமை நிலைமையை அறிந்த அஸ்ஸாம் காவல்துறையினர் அப் பெண்ணுக்கு இரு சக்கர வாகனத்தை வாங்கி பரிசளித்துள்ளனர். இந்த நெகிழ்ச்சியான சம்பவம் குறித்து, பேசிய ஜான்மோனி “எனது தந்தை கடந்த 18 ஆண்டுகளாக உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார். அவரால் நடக்க முடியாது. என் அம்மா போர்பருவா சந்தையில் காய்கறிகளை விற்கிறார். நான் இரண்டு வருடங்களாக அவருக்கு உதவி செய்து வருகிறேன்” என கூறினார்.
மார்ச் 25 ஆம் தேதி நாடு தழுவிய ஊரடங்கு விதிக்கப்பட்ட பின்னர், போர்பருவா சந்தைக்குச் செல்ல முடியாததால், சைக்கிளில் தனது பொருட்களை சுமந்துகொண்டு வீட்டுக்கு வீடு காய்கறிகளை விற்கத் தொடங்கினாள். எஸ்பி ஸ்ரீஜித் டி உட்பட மாவட்ட காவல்துறையின் உயர் அதிகாரிகள் இவரைப் பற்றி சமூக ஊடகங்களில் இருந்து தெரிந்துகொண்டுள்ளனர். எனவே அவரைத் தொடர்பு கொண்டு ஏதாவது உதவி தேவையா என்று கேட்டுள்ளனர்.
இது தொடர்பாக துணை காவல் கண்காணிப்பாளர் பல்லவி மஜும்தர், "அவளுடைய சுய மரியாதை அவளுக்கு பண உதவி பெறுவதைத் தடுத்தது. ஆகவே, அவளுக்கு காய்கறிகளை மிகவும் வசதியாகவும் பெரிய அளவிலும் கொண்டு செல்லக்கூடிய வகையில் அவளுக்கு இரு சக்கர வாகனம் பரிசளிக்கும் யோசனை வந்தது"என்று கூறினார். இது குறித்த விரிவான செய்தியை என்.டி.டிவி ஊடகம் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

