“பாஜக 400 வென்றால் ஞானவாபி மசூதி இருக்குமிடத்தில் பாபா விஸ்வநாத் ஆலயம் கட்டப்படும்”- அசாம் முதல்வர்

பாஜக 400 இடங்களை வென்றால் ஞானவாபி மசூதி இருக்கும் இடத்தில் பாபா விஸ்வநாத் கோயில் கட்டப்படும் என அசாம் முதலமைச்சர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.
அசாம் முதலமைச்சர்  ஹிமாந்தா பிஸ்வா சர்மா
அசாம் முதலமைச்சர் ஹிமாந்தா பிஸ்வா சர்மாமுகநூல்

இந்த மக்களவை தேர்தலில் பாஜக 400 இடங்களை வென்றால் மதுராவில் கிருஷ்ணர் கோயில் கட்டப்படும். ஞானவாபி மசூதி இருக்கும் இடத்தில் பாபா விஸ்வநாத் கோயில் கட்டப்படும். பாகிஸ்தானிடமிருந்து காஷ்மீர் மீட்கப்படும்” என்று அசாம் முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மக்களவை தேர்தல், தற்போதுவரை 4 கட்டங்கள் நடைபெற்று முடிந்துள்ளன. இன்னும் மீதமுள்ள 3 கட்டங்களுக்கான பரப்புரை நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து வருகிறது. இந்த தேர்தல் பரப்புரைகளில் அரசியல் கட்சிகள் மாறி மாறி ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டி வருகின்றனர். அதில் சிலர் கடும் வார்த்தைகளை பயன்படுத்தி வருகின்றனரும் கூட. இந்நிலையில், டெல்லியில் லஷ்மி நகரில் நடைபெற்ற தேர்தலில் பரப்புரையில் அசாம் முதலமைச்சர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா பேசிய கருத்து மிகவும் சர்ச்சைக்குரியதாக மாறியுள்ளது.

இந்த தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், “பாஜக 300 இடங்களில் வெற்றி பெற்றபோது அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டது. தற்போது இம்முறை பாஜக 400 இடங்களை கைப்பற்றினால் ஞானவாபி மசூதி இருக்கும் இடத்தில் பாபா விஸ்வநாத் கோயிலும், மதுராவில் உள்ள கிருஷ்ண ஜென்மபூமியில் கிருஷ்ணர் கோயிலும் கட்டப்படும். மேலும் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் மீட்கப்பட்டு பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியாவுடன் அது சேர்க்கப்படும்.

அசாம் முதலமைச்சர்  ஹிமாந்தா பிஸ்வா சர்மா
“இந்து முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன்” - பிரதமர் மோடி

இதற்கு முன் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது நாடாளுமன்றத்தில் காஷ்மீர் ஆக்கிரமிப்பு குறித்து எந்த ஒரு விவாதமும் வைக்கப்படவில்லை. இனி அப்படி இருக்காது. விரைவில் பிரதமர் மோடியின் தலைமையில் காஷ்மீர் நமது நாட்டின் ஒரு பகுதியாக மாறும்.

இதற்காக ஒவ்வொரு நாளும் போராட்டம் நடைபெறுகிறது. காங்கிரஸ் அடிக்கடி மதச்சார்பின்மை பற்றி பேசுகிறது, ஆனால் அரசியலமைப்பின் அசல் வரைவில் மதச்சார்பின்மை என்ற வார்த்தை குறிப்பிடப்படவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

யார் இந்த ஹிமாந்தா பிஸ்வா சர்மா?

அடிப்படையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்தான் அசாம் முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா. 2001 ஆம் ஆண்டு முதன்முறையாக காங்கிரஸ் கட்சி சார்பாக சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். காங்கிரஸில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2015 ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். இந்நிலையில், தற்போது அசாம் முதல்வராக இருக்கிறார் ஹிமாந்தா பிஸ்வா சர்மார்.

இந்நிலையில், பாஜகவை சார்ந்தவர்களின் இந்த தொடர் மத ரீதியிலான பேச்சு அடுத்தடுத்த சர்ச்சைகளை தேர்தல் களத்தில் ஏற்படுத்தி வருகிறது.

நேற்றுதான் பிரதமர் நரேந்திர மோடி, “நான் ஒருபோதும், இந்து முஸ்லிம் பிரிவினையை ஏற்படுத்தமாட்டேன். மோடி மாடலில் ஒரு போதும் இந்து - முஸ்லிம் பிரிவினைக்கு இடமில்லை” என்று கூறியிருந்தார். ஆனால் அதற்குள் அசாம் முதல்வர் மசூதியை இடித்து கோயில் கட்டுவோம் என வாக்குறுதி அளித்திருக்கிறார். இது பிரதமரின் கூற்றை கேள்விக்குறியாக்கியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com