”சர்ஜிக்கல் தாக்குதலுக்கு ஆதாரம் எங்கே?”-சந்திரசேகர் ராவ் கருத்தும் அசாம் முதல்வர் பதிலும்

”சர்ஜிக்கல் தாக்குதலுக்கு ஆதாரம் எங்கே?”-சந்திரசேகர் ராவ் கருத்தும் அசாம் முதல்வர் பதிலும்
”சர்ஜிக்கல் தாக்குதலுக்கு ஆதாரம் எங்கே?”-சந்திரசேகர் ராவ் கருத்தும் அசாம் முதல்வர் பதிலும்

பாகிஸ்தான் மீது இந்திய ராணுவம் நடத்திய துல்லியத் தாக்குதல் குறித்து தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவ் கேள்வியெழுப்பி இருந்த சூழலில், அவருக்கு பதிலளிக்கும் விதமாக அசாம் முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா வீடியோ ஆதாரம் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

காஷ்மீரின் புல்வாமா பகுதியில் கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற உத்தராகண்ட் தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்ட முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, புல்வாமா தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தானில் இந்திய ராணுவம் நடத்தியதாக கூறப்படும் துல்லியத் தாக்குதல் குறித்து கேள்வியெழுப்பினார்.

மேலும், அவ்வாறு துல்லியத் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தால் அதுதொடர்பான ஆதாரங்களை மத்திய அரசு வழங்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்திருந்தார். ராகுலின் இந்த பேச்சுக்கு பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

இதனிடையே, இந்த விவகாரம் குறித்து தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவிடம் நிருபர்கள் நேற்று கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த சந்திரசேகர ராவ், "துல்லிய தாக்குதல் குறித்த ஆதாரத்தை ராகுல் காந்தி கேட்பதில் என்ன தவறு இருக்கிறது? நானும் இப்போது கேட்கிறேன். துல்லிய தாக்குதலின் ஆதாங்களை வெளியிடுங்கள். இதுதொடர்பாக தவறான பிரசாரத்தை பாஜக மேற்கொள்வதாக மக்கள் சந்தேகிக்கிறார்கள். எனவே அவர்களின் சந்தேகத்தை நிவர்த்தி செய்ய வேண்டியது அரசின் கடமை ஆகும்" எனக் கூறினார்.

இந்நிலையில், அசாம் முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா, தனது ட்விட்டர் பக்கத்தில் பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய துல்லிய தாக்குதல் தொடர்பான இந்திய ராணுவத்தின் வீடியோவை இன்று வெளியிட்டார். அந்த வீடியோவில், தீவிரவாதிகளின் நிலைகள் மீது விமானங்கள் வெடிகுண்டுகளை வீசும் செயற்கைக்கோள் காட்சிகள் இருக்கின்றன.

இந்த வீடியோவுக்கு கீழே, "புல்வாமா நினைவு நாளன்று, நமது ராணுவ வீரர்களை அவமதிக்கும் செயலில் எதிர்க்கட்சிகள் ஈடுபட்டுள்ளன. கே. சந்திரசேகர ராவ், காங்கிரஸ் குடும்பத்தின் மீது தனக்கு இருக்கும் விசுவாசத்தை காட்ட துடிக்கிறார். ஆனால், எங்கள் விசுவாசம் எல்லாம் தேசத்தின் மீது தான். இந்திய ராணுவத்தை அவமதிப்பவர்களை புதிய இந்தியா சகித்துக் கொள்ளாது" என ஹிமந்த விஸ்வ சர்மா தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com