வாக்குப்பதிவு நிறைவு | புதிய சாதனை படைத்த புதுச்சேரி, அசாம்.. கேரளத்தில் 78.03%!
வாக்குப்பதிவு இறுதி நிலவரத்தைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, புதுச்சேரி மற்றும் அசாம் மாநிலங்களில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக பதிவாகியுள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம் மற்றும் அசாம் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் கடந்த மார்ச் மாதம் 15-ஆம் தேதி வெளியிட்டது. அதன்படி, தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி ஒரே கட்டமாகவும், மேற்கு வங்கம் சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23 மற்றும் ஏப்ரல் 29 ஆகிய தேதிகளில் இருகட்டமாகவும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, புதுச்சேரி, கேரளா மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களுக்கான தேர்தல் ஏப்ரல் 9ஆம் தேதி ஒரேகட்டமாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. அதன்படி, இன்று காலை 7 மணிக்கு, அசாம், கேரளா புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் வாக்குப்பதிவு தொடங்கியது. காலை 11 மணி நிலவரப்படி, அசாமில் 38.92%, கேரளாவில் 33.28%, மற்றும் புதுச்சேரியில் 37.06% என இருந்த வாக்குச் சதவிகிதம், மாலை 5 மணியின்போது அசாமில் 84.42%, கேரளாவில் 75.01%, புதுச்சேரியில் 86.92% என்கிற வீதத்தில் இருந்தது.
இந்த நிலையில், மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்தது. எனினும், காலக்கெடுவுக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வந்திருந்தவர்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டு, அவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில், வாக்குப்பதிவு இறுதி நிலவரத்தைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, புதுச்சேரி மற்றும் அசாம் மாநிலங்களில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக பதிவாகியுள்ளது. 30 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருக்கும் புதுச்சேரியைப் பொறுத்தவரை 89.83 சதவீதம் வாக்கு பதிவாகியுள்ளது. இது, 1964-இல் நடந்த முதல் தேர்தலுக்குப் பிறகு ஒரு சட்டமன்றத் தேர்தலில் பதிவான அதிகபட்ச வாக்குப்பதிவாகும். அடுத்து, 126 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட அசாமில் 85.38 சதவீதம் வாக்கு பதிவாகியுள்ளது. இது, கடந்த 2016ஆம் ஆண்டைவிட அதிகமாகும். அப்போது, 84.67 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. 140 உறுப்பினர்களைக் கொண்ட கேரளத்தில் 78.03 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. இந்த வாக்குகள் அனைத்தும் மே 4ஆம் தேதி எண்ணப்பட இருக்கிறது.

