தனி மாநிலம்கோரி போராடிய போடோ அமைப்பினருடன் மத்திய அரசு ஒப்பந்தம்
அசாமில் தனி மாநிலம்கோரி ஆயுதம் தாங்கி போராடிய போடோ அமைப்பினருடன் முத்தரப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
போடோலேண்ட் பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கான முத்தரப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் முன்னிலையில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை இணைச் செயலாளர் சத்யேந்திர கார்க், அசாம் தலைமை செயலாளர் குமார் சஞ்சய் கிருஷ்ணா மற்றும் தனி மாநில போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போடோ இன அமைப்புகள் நான்கின் பிரதிநிதிகள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இதன்படி போடோ தனி மாநில கோரிக்கையை கைவிடுவதுடன் ஆயுதப் போராட்டங்களையும் நிறுத்திக்கொள்ள 4 போராட்ட அமைப்புகளும் சம்மதம் தெரிவித்துள்ளன. அதேசமயம் அசாமின் போடோ பகுதி வளர்ச்சிக்கு அடுத்த 3 ஆண்டுகளில் ஆயிரத்து 500 கோடி ரூபாய் செலவில் சிறப்பு உதவிகளை வழங்க மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது.
இந்த ஒப்பந்த நிகழ்விற்கு சாட்சியாக அசாம் முதல்வர் சர்பானந்த சோனோவாலும் கையெழுத்திட்டார். இதன் பின் கருத்து தெரிவித்த பிரதமர் மோடி இந்த ஒப்பந்தம் கையெழுத்தான தினம் இந்திய வரலாற்றில் மிகச்சிறந்த தினம் என மகிழ்ச்சி தெரிவித்தார். இது அசாமில் அமைதியையும் சமூக நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தும் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
போடோ பகுதி மக்களின் வளர்ச்சிக்கும் அவர்கள் கலாசார மேம்பாட்டுக்கும் இந்த ஒப்பந்தம் உதவும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். போடோ தனி மாநில போராட்டங்களில் 4 ஆயிரம் உயிர்கள் பலியாகியுள்ளதாகவும் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

